Doctor Vikatan: இந்தியனா, வெஸ்டர்னா... எந்த toilet யாருக்கு ஏற்றது, ஏன்?
Doctor Vikatan: இந்தியன் டாய்லெட் உபயோகம்தான் சிறந்தது என்று சிலரும், வெஸ்டர்ன் டாய்லெட்தான் சிறந்தது என வேறு சிலரும் காலங்காலமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று பெரும்பாலான வீடுகளில் இந்தியன் டாய்லெட்டை வெஸ்டர்னாக மாற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். உண்மையில், இந்த இரண்டில் எது சிறந்தது... யார், எதை உபயோகிக்க வேண்டும்?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்
தினமும் காலையில் எழுந்ததும் முழுமையாக மலம் கழித்துவிட்டாலே, ஒருவித நிம்மதியான உணர்வு ஏற்படும் பலருக்கும். மலம் கழிப்பதற்காகவே, டீ குடிப்பதாகவும் புகை பிடிப்பதாகவும் சொல்கிற பலரைப் பார்க்கலாம். சிரமமின்றி மலம் கழிக்க வெஸ்டர்ன் டாய்லெட்டை விடவும் இந்தியன் டாய்லெட்டே சிறந்தது.
இந்தியன் டாய்லெட் உபயோகிக்கும்போது குத்தவைத்து உட்கார்ந்த நிலையில் மலம் கழிக்க வேண்டும். இது பல வகைகளில் சாதகமானதும்கூட. நம் உடலில் மலம் சேரும் மலக்குடலை, ஆசன சுருக்குத் தசை என்கிற மூடிதான் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கும். ஆசன சுருக்குத் தசை என்கிற சுருக்குப்பையைத் திறப்பதற்கு மெல்லிய தசைகள் இருக்கும். அந்தத் தசைகள் எளிதாகவும் முழுமையாகவும் வேலை செய்ய, ஸ்குவாட்டிங் பொசிஷன் எனப்படும் குத்தவைத்து உட்காரும் முறையே மிகச் சிறந்தது. நாம் அந்த பொசிஷனில் உட்காரும்போது முழுமையாகத் திறக்கவும், மடிந்த நிலையிலுள்ள மலக்குடல் திறக்கவும் செய்கிறது.
ஹெர்னியா எனப்படும் குடல் இறக்க பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் குத்தவைத்து உட்காரும் பொசிஷன் உதவுகிறது. ரொம்பவும் முக்காமல் எளிதாக மலம் கழிக்கவும் இந்த பொசிஷன் வசதியாக இருக்கும். குழந்தைகளை சிறு வயதிலிருந்தே இப்படி குத்தவைத்து உட்காரப் பழக்கும்போது, அவர்கள் வளர்ந்ததும் உடலின் பேலன்ஸுக்கும் உதவியாக இருக்கும். கால்களுக்கான தசைகளும் இந்த பொசிஷனால் வலுப் பெறும்.
இத்தனை நன்மைகள் இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மூட்டுத் தேய்மானம் வரும்போது, வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள். உடல் இயக்கத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ, மூட்டுத் தொந்தரவு இருந்தாலோ, கீழே உட்கார்ந்து எழுந்திருப்பதில் பிரச்னை இருந்தாலோ, நரம்பியல் பிரச்னை இருந்தாலோ, வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகிப்பதுதான் சரியானது.
இந்தியன் டாய்லெட் உபயோகிப்பதன் நல்ல தன்மைகளையும் வெஸ்டர்ன் டாய்லெட் உபயோகிப்பதன் சௌகர்யத்தையும் சேர்த்து அனுபவகிக்கும்வகையில், இப்போது ஃபுட் ஸ்டூல்கள் கிடைக்கின்றன. இதை வெஸ்டர்ன் டாய்லெட்டில் வைத்துப் பயன்படுத்தினால், மலக்குடலுக்குத் தேவையான வசதியான பொசிஷனை தக்கவைக்க முடியும். ஹெர்னியா பாதிப்பையும் தவிர்க்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.