ISKCON: ஆரம்பத்தில் சின்ன சின்னதாய்; இப்போது லட்சக்கணக்கில் - கோயில் பணத்துடன் ஓட்டம் பிடித்த ஊழியர்
ஆக்ராவில் லட்சக்கணக்கில் கோயில் பணத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி உள்ளார் இஸ்கான் ஊழியர் ஒருவர்.
ஆக்ரா பிருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் அமைப்பில் 2019-ம் ஆண்டு சேர்ந்துள்ளார் முரளிதர் தாஸ் என்பவர். இந்த சம்பவம் குறித்து இஸ்கான் நிர்வாகம் கூறுவதாவது...
`ஆரம்பத்தில் அங்கே சின்ன சின்ன வேலைகளை பார்த்து இஸ்கான் அமைப்பு அதிகாரிகளின் நம்பிக்கையை பெற்றுள்ளார் முரளிதர் தாஸ். அதன்பின்னர், இஸ்கான் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினராக மாறி, அந்த அமைப்பின் அதிகாரிகள் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். இஸ்கான் கோயிலுக்கு நன்கொடைகளை பெறுவது, அதை இஸ்கான் அமைப்பின் நிதி பிரிவில் சமர்ப்பிப்பது தான் அவரது பணி.
முதலில், சரியாக இந்தப் பணியை செய்துகொண்டிருந்தவர், போக போக சின்ன சின்ன ஏமாற்று வேலைகளை செய்ய தொடங்கியுள்ளார். நன்கொடை கொடுப்பவர்களுக்கு தரும் பில் புத்தகத்தை நான்கு, ஐந்தை பெற்றுக்கொண்டு, வெறும் ஒன்று அல்லது இரண்டை தான் இஸ்கான் அமைப்பிடம் திரும்ப தருவார். ஒவ்வொரு புத்தகத்திலும் 50 பில் பக்கங்கள் இருக்கும்.
ஒன்று அல்லது இரண்டு புத்தகத்தை கொடுத்து, அதற்கான தொகையை மட்டும் நிதி பிரிவிடம் ஒப்படைப்பார். எடுத்துச்சென்ற மீதி மூன்று - நான்கு புக்குகளை திருப்பியும் தரமாட்டார். அதன்மூலம் வசூலிக்கப்பட்ட தொகையையும் கொடுக்கமாட்டார்.
இந்த நிலையில், திடீரென்று ஒருநாள் லட்சக்கணக்கில் கோயில் பணத்தை எடுத்துக்கொண்டு தாஸ் மாயமாகி உள்ளார். தாஸிற்கு போன் செய்து பில் புத்தகம் மற்றும் பணத்தைக் கேட்டப்போது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பின்னர், போன் செய்தப்போது தாஸ் போனை எடுக்கவில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் கடந்த 20 நாட்களாக எதுவும் தெரியவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்கான் அமைப்பினர் தாஸ் குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். ஆனால், ஆரம்பத்தில் அந்தப் புகாரின் மீது பிருந்தவனம் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது, உயர் அதிகாரிகளின் உதவியை அமைப்பினர் நாடியப் பின்னர், தாஸ் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.