Ooty: குளிரைச் சமாளிக்க வீட்டிற்குள் தீ மூட்டிய இளைஞர், புகையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டத்தில் தற்போது உறைபனி காலம் என்பதால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் தாங்க முடியாத அளவிற்குக் குளிர் நடுங்க வைக்கிறது. வெம்மை ஆடைகளை அணிவது, வீடுகளில் ஹீட்டர் பயன்படுத்துவது அல்லது தீ மூட்டுவது போன்ற செயல்கள் மூலம் கடும் குளிரிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டி அருகில் உள்ள இத்தலார் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஜெயப்பிரகாஷ் என்பவர் நேற்று முன்தினம் (ஜனவரி 2) இரவு வீட்டுக்குள் தீ மூட்டியிருக்கிறார். வீட்டிலிருந்த அனைவரும் குளிர் காய்ந்துவிட்டு உறங்கியுள்ளனர். காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாத ஜெயப்பிரகாஷ் வீட்டிலிருந்து புகை வெளியேறிக் கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
ஜெயப்பிரகாஷின் வீட்டின் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டிலிருந்த அனைவரும் புகையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு பதறிய அக்கம்பக்கத்தினர், அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்ற நால்வருக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்துத் தெரிவித்த மருத்துவர்கள், "ஜெயப்பிரகாஷ் அவரின் மனைவி புவனா, 4 வயது மகள் தியாஸ்ரீ, உறவினர்கள் சாந்தா மற்றும் ஈஸ்வரி என நான்கு பேரும் வீட்டுக்குள் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கியுள்ளனர். புகையால் ஆக்ஸிஜன் குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. மூச்சுத்திணறலில் ஜெயப்பிரகாஷ் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற குளிர் காலங்களில் தீ மூட்டினால் புகை வெளியேறும் வகையில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...