கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
Prashant Kishor: மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதம்; பிரசாந்த் கிஷோர் கைது!
பீகாரில் கடந்த மாதம் 13-ம் தேதி அரசு பணிகளுக்கான பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC) தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள்கள் ஏற்கெனவே கசிந்துவிட்டதாக கூறி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC), பீகாரில் நடந்த இந்தத் தேர்வை ரத்து செய்யவேண்டும் எனக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, அந்தக் குறிப்பிட்ட தேர்வு மையத்தின் தேர்வை மட்டும் ரத்து செய்து, மறு தேர்வு நடத்தப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் அரசியல் ஆலோசகரும், ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், எம்.பி. பப்பு யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரசாந்த் கிஷோர் கடந்த வியாழக்கிழமையில் இருந்து மாணவர்களுடன் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், இன்று பிரசாந்த் கிஷோரை பீகார் காவல்துறை கைது செய்யப்பட்டு , வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவர் மருத்துவ சிகிச்சையைப் புறக்கணித்து, உண்ணாவிரதத்தைத் தொடர்வதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் கைதுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ``மாணவர்களுடன் நான் முழு பலத்துடன் இருக்கிறேன். இந்தப் பிரச்சினை தீரும் வரை, காவல்துறை தண்ணீர் தாக்குதல் நடத்தியதற்கு பிறகும் கடும் குளிரிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் கல்வித்துறை அமைச்சர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோதுகூட அவர் மாணவர்களின் போராட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனவே, பிபிஎஸ்சி தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து ஜனவரி 7-ம் தேதி பாட்னா உயர் நீதிமன்றத்தில் எனது கட்சி மனு தாக்கல் செய்யும்.
போராட்டக் களத்துக்கு அருகில் சொகுசு வேன் நிற்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்கள். நான் கழிப்பறையைப் பயன்படுத்த வீட்டிற்குச் சென்றால், பத்திரிகைகளும், ஆளும் அரசும் என் உண்ணாவிரதம் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தவிர்க்க எனக்கு வேன் தேவைப்பட்டது. மக்கள் இதைப் பயன்படுத்த அனுமதிப்பீர்களா எனக் கேட்கிறார்கள்.தேவைப்படுபவர்கள் பயன்படுத்தலாம். அவர்கள் கழிப்பறைக்கு செல்லலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.