தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்...
நல்லபாம்பு கடித்து மரணமடைந்த பாம்புபிடி வீரர்; ``குடும்பத்துக்கு அரசு உதவி..'' -மக்கள் கோரிக்கை!
கேரள மாநிலத்தில் பாம்புபிடி வீரர்கள் அதிகமாக உள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக பாம்புபிடி வீரர்களை தொடர்புகொண்டு உதவி கேட்கின்றனர். பாம்புபிடி வீரர்கள் பாம்பை பிடித்து வனத்துறை உதவியுடன் காட்டுக்குள் விடுகின்றனர். பெரும்பாலான பாம்புபிடி வீரர்கள் இதை சேவையாகத்தான் செய்து வருகின்றனர். அதே சமயம் பாம்புகளால் பாம்புபிடி வீரர்களுக்கு அவ்வப்போது சோக நிகழ்வுகள் நடப்பதும் உண்டு. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர் வாவ சுரேஷ் என்பவர் பாம்பை பிடித்தபோது எதிர்பாராதவிதமாக கடித்த நிகழ்வு 2022-ம் ஆண்டு நடந்தது. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் பின்னர் நலமடைந்தார்.
இப்போது, கொல்லம் பகுதியில் நல்லபாம்பை பிடிக்கச் சென்ற பாம்புபிடி வீரர் ஒருவரை பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொல்லம் எரூர் பகுதியைச் சேர்ந்தவர் சஜூ ராஜன் (38). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். பாம்புபிடி வீரரான இவர் பாம்புகளுக்கு துன்பம் கொடுக்காமல் லாவகமாக பிடிப்பதால் இவரை பாம்புகளின் தோழன் என மக்கள் அழைத்துவந்தனர்.
சில நாள்களுக்கு முன் எரூர் தெக்கேவயல் காலனி பகுதியில் ராமச்சந்திரன்(65) என்பவர் நல்லபாம்பு கடித்து மரணமடைந்தார். மேலும், அந்த பாம்பால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சஜூ ராஜன் அங்கு சென்று பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
ராமச்சந்திரனின் வீட்டுக்குள் பாம்பை தேடினார். அங்கு பாம்பு தென்படாததால் வீட்டை சுற்றியுள்ள உள்ள புதர் மண்டிய பகுதிகளை சுத்தமாக்கியபோது பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்தார் சஜூராஜன். அப்போது எதிர்பாராதவிதமாக நல்லபாம்பு சஜூராஜனை தீண்டியது. இருப்பினும் பாம்பை பைக்குள் அடைத்துள்ளார். உடனடியாக அவரை கொட்டியம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
இதற்கிடையே சஜூராஜன் பிடித்து வைத்திருந்த பாம்பை வனத்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். சஜூராஜனின் மரணம் பாம்புபிடி வீரர்கள் மத்தியிலும், அப்பகுதி மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தெக்கேவயல் காலனி மக்கள் கூறுகையில், "பாம்பை பிடித்த சஜூ ராஜன் வழக்கம்போல அதை குளிப்பாட்டி, பைக்குள் அடைத்தார். அதற்கிடையே பாம்பு அவரை கடித்துள்ளது. அவர் மருத்துவமனைக்குச் செல்ல காரில் ஏறிய சமயத்தில் பதற்றம் இல்லாமல், சாதாரணமாகத்தான் இருந்தார். மருத்துவமனைக்குச் சென்றபின்னர் அவரது உடல்நிலை மோசமாகி, மரணம் சம்பவித்துள்ளது. மிகவும் ஏழ்மையான சஜூ ராஜனின் குடும்பத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும்" என்றனர்.