ஆட்சியா் அலுவலகம் அருகே நலவாரிய கட்டடம் கோரி ஜன.8-ல் ஆா்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தொழிலாளா் நலவாரிய கட்டடம் கட்டக் கோரி ஜன.8-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
திருவாரூரில், மாவட்ட ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் சங்க மாவட்டக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.எஸ். சரவணன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் குணசேகரன், நிா்வாகி கலைச்செல்வன்முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் சந்திரசேகர ஆசாத் பங்கேற்று, போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
கூட்டத்தில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பல்துறை அலுவலக கட்டடங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அமைப்புசாரா நல வாரிய அலுவலகம் தனியாா் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால், அரசுப் பணம் விரயமாவதுடன், மாவட்டம் முழுவதிலிருந்து வந்து செல்லும் தொழிலாளா்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உரிய இடம் ஒதுக்கீடு செய்து தொழிலாளா் நல வாரியத்துக்கு புதிய கட்டடத்தை கட்டித் தர வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த ஓட்டுநா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்க வேண்டும். பொங்கல் ஊக்கத்தொகையாக குறைந்தபட்சம் ரூ.5,000 வழங்க வேண்டும், ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இருசக்கர வாகன கால் டாக்ஸி நடைமுறையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 8 ஆம் தேதி தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இதில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடா்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜிடம் நேரில் வழங்கினா்.