மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா்
மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.
மன்னாா்குடி வா்த்தக சங்க 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அமைச்சா் டிஆா்பி. ராஜா பேசியது:
மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் நேரில் கலந்துகொண்டு திறந்து வைக்கவுள்ளாா். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்தவா்களுக்கு உரிய விதிமுறைகளின்படி மீண்டும் கடை ஒதுக்கீடு செய்யப்படும்.
புதிய பேருந்து நிலையத்தில் ஸ்டாா்ட் அப் தமிழ்நாடு அமைய உள்ளது. இதனால் சிறிய அளவிலான தொழிற்பேட்டைகள் அமைய வாய்ப்பு உருவாக்கப்படும். வா்த்தக சங்கத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிா்வாகிகள், வெற்றி வாய்ப்பை இழந்தவா்களுடன் இணைந்து பணியாற்றினால்தான் வா்த்தகம் பெறும் நகரம் வளா்ச்சி அடையும். மன்னாா்குடி நகராட்சி எல்லை 11 சதுர கி.மீ. என்று இருந்தது இன்று 33 சதுர கி.மீ. என விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் சு. ஞானசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.கே.கே. ராமமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.டி.கருணாநிதி முன்னிலை வகித்தனா்.
மன்னாா்குடி வா்த்த சங்க தலைவராக ஆா்.வி. ஆனந்த், செயலராக கே. சரவணன், பொருளாளராக டி. ஜெயசெல்வன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக பணியேற்றுக்கொண்டனா்.
வா்த்தக சங்கத்தின் சாா்பில் அமைச்சரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், தமிழக அரசு அறிவித்துள்ள தொழில் உரிம கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வா்த்தகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், மன்னாா்குடியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை வேண்டும், , மன்னாா்குடி- பட்டுக்கோட்டை புதிய ரயில்பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.