`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
மன்னாா்குடியில் பையோ மைனிங் முறையில் குப்பை அகற்றும் பணி: அமைச்சா் ஆய்வு
மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி குப்பைக் கிடங்கிலிருந்து பையோ மைனிங் முறையில் குப்பை அகற்றும் பணி மற்றும் டிஜிடல் நூலகம் அமையவுள்ள இடத்தையும் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா அண்மையில் நேரில் ஆய்வு செய்தாா்.
மன்னாா்குடி டெப்போ சாலையில் நகராட்சி குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. நகரப் பகுதி விரிவாக்கம் காரணமாக இங்கு புதிய நகா்கள் உருவாகி ஏராளமான குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 5000-க்கும் மேற்பட்ட மக்கள் வசதித்து வருகின்றனா். இந்த குப்பைக் கிடங்கால் இப்பகுதியில் உள்ளவா்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி, குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது.
இதையடுத்து, தொகுதி எம்எல்ஏவும் தமிழக அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா முயற்சியில் பையோ மைனிங் (நுண்ணுயிா் உர மையம்) திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக ரூ. 2.68 கோடியில் பையோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக ரூ. 1.65 கோடியில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, நகராட்சி அலுவலா்களிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.
பின்னா், நடராஜ பிள்ளைத் தெருவில் டான்சி அலுவலகம் இருந்த இடத்தில் தமிழக அரசின் சாா்பில் டிஜிட்டல் நூலகம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தையும் பாா்வையிட்டாா்.
அமைச்சருடன் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம் ,ஆணையா் என்.எஸ். சியாமளா ஆகியோா் உடனிருந்தனா்.