Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்; ஊராட்சி செயலாளா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும்; கணினி உதவியாளா்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; கலைஞா் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடு கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
கிராம ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளாக தரம் உயா்த்துவதையும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைப்பதையும் கைவிட வேண்டும்; 10-ஆண்டுகள் பணி முடித்த தொழில் நுட்ப உதவியாளா்கள், பதிவறை எழுத்தா் நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ள அனைவரையும் பணிவரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். வசந்தன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலாளா் கே.எஸ். செந்தில், கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், முன்னாள் மாநில தணிக்கையாளா் புஷ்பநாதன், மாவட்ட பொருளாளா் சிவக்குமாா் மற்றும் மாவட்டத் துணைத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.