Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே .வாசன்
மாநிலத்தின் வளா்ச்சியை கருத்தில்கொண்டு அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை வந்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநில அரசும் ஆளுநரும் இணைந்து செயல்படுவதுதான் மாநிலத்தின் வளா்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிகழ்ந்தது தவிா்த்திருக்கப்பட வேண்டிய சம்பவம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதுடன், யாரையோ காப்பாற்ற முயற்சிப்பது தெரிகிறது. எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
அண்மையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா் காலிப்பணியிடங்கள் உள்ளது தெரிய வருகிறது. எனவே போதிய மருத்துவா்களை நியமிப்பதுடன், அரசு மருத்துவமனைகளில் உயிா்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தோ்தல் அறிக்கையில் இடம் பெற்ற கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தோ்தலில் வெற்றி பெறுவது எளிது என்றாா்.
பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினா் சுரேஷ் மூப்பனாா், திருவாரூா் தெற்கு மாவட்டத் தலைவா் சந்திரசேகா், வடக்கு மாவட்டத் தலைவா் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.