ஹென்ரிட்டா லாக்ஸ் - உயிர் நீத்து உயிர்கள் காக்கும் பெண் வள்ளல் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடைபெற ஆரம்பிக்காத காலத்தில் ஹெலா (HeLa) உயிரணு புதுமை உணர்வூட்டும் ஒரு கண்டுபிடிப்பாக கருதப்பட்டது.
மனித உயிரணுக்களை செயற்கை ஊடக வளர்ப்பு (culture) முறையில் உயிருடன் வைத்திருக்க பல தசாப்தங்கள் கடந்து விஞ்ஞானிகள் முயற்சித்து முதல் முறையாக ஹெலா உயிரணுக்களை (HeLa cell line, the first immortalized human cell line) உயிருடன் வைத்ததால் ஹெலா உயிரணுக்கள் நவீன மருத்துவ ஆராய்ச்சி வரலாற்றின் மைல்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
உயிரணுக்களை உயிருடன் வைக்க ஆராய்ச்சி நடைபெற்ற காலத்தில் மற்ற உயிரணுக்கள் இறந்த நிலையில் ஹெலா உயிரணுக்கள் மட்டும் உயிருடன் இருந்து ஆச்சரியத்தை உருவாக்கின.
ஒவ்வொரு 24 மணி நேரமும் பெருக்கம் அடைந்த ஹெலா உயிரணுக்கள் பெருக்கமடைவதை நிறுத்தவே இல்லை. இதன் மூலம் ஹெலா உயிரணுக்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட முதல் அழியாத உயிரணுக்கள் ஆனது.
பரந்த அளவில் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட ஹெலா உயிரணுக்கள் சளிக் காய்ச்சல் (இன்ஃப்ளூயன்ஸா), அக்கி (ஹெர்பெஸ்) போன்ற சாதாரண நோய்கள் முதல் ரத்தப் புற்று (லுகேமியா), நடுக்குவாதம் (பார்கின்சன்) போன்ற ஆபத்தான நோய்கள் வரை பல நோய்களுக்கான மருந்துகள் உருவாக காரணமாக இருந்தன.
ஹெலா உயிரணுக்களால் மட்டுமே உருவான போலியோ தடுப்பூசி சிலரை பல மில்லியன் டாலர் தொழில் நிறுவனங்கள் உருவாக்க வைத்தது. இத்தகைய பல மருத்துவ சாதனைகளுக்கு காரணமான இந்த பிரபல மனித உயிரணுவின் தோற்றம் குறித்தும் மருத்துவ ஆராய்ச்சிக்கு அவை பயன்படுத்தப்படுவது குறித்தும் உலகிற்கும் உயிரணுக்களின் உரிமையாளர் குடும்பத்திற்கும் பல தசாப்தங்களாக சொல்லாமல் மறைக்கப்பட்டது.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பெரும்பெருக்கு மீள்திறன் (prolific and resilient) கொண்ட ஹெலா உயிரணுக்கள் ஹென்ரிட்டா லாக்ஸ் என்ற ஆப்ரிக்க அமெரிக்க இளம் பெண்ணின் கர்ப்பப்பை வாய் கட்டியில் இருந்து எடுக்கப்பட்டது. அதனால் தான் ஹென்ரிட்டா லாக்ஸ் என்ற பெயர் சுருக்கப்பட்டு இந்த உயிரணுக்களுக்கு ஹெலா எனப் பெயரிடப்பட்டது.
ஹென்ரிட்டா லாக்ஸ் (Henrietta Lacks) தீவிர கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஐந்து இளங் குழந்தைகளுக்கு தாயான ஹென்ரிட்டா லாக்ஸ் 1951 ஆம் ஆண்டு தனது 31வது வயதில் இறந்தார். ஹென்ரிட்டா லாக்ஸின் மரணத்திற்கு பின் மருத்துவமனை அருகில் திசு ஆய்வகத்தை நடத்தி வந்த பிரபல புற்றுநோய் மற்றும் தீநுண்மி ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் கீ என்பவரால் ஹென்ரிட்டா லாக்ஸின் உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டன.
ஹென்ரிட்டா லாக்ஸின் இறப்பிற்கு முன் அவருக்கோ இறப்பிற்கு பின் அவரது குடும்பத்தினருக்கோ செயற்கை ஊடக வளர்ப்பிற்காக ஹென்ரிட்டா லாக்ஸின் உயிரணுக்கள் எடுக்கப்பட்டது தெரிவிக்கப்படவில்லை. அதாவது அனுமதி இன்றியே உயிரணுக்கள் எடுக்கப்பட்டுள்ளது.
ஹென்ரிட்டா லாக்ஸின் குடும்பத்தினர் தற்செயலாக அறிந்து கொண்ட 1981ஆம் ஆண்டு வரை ஹெலா உயிரணுக்களின் தோற்றம் அவர்களுக்கு தெரியாது. அதன் பின் ஹென்ரிட்டா லாக்ஸின் வாரிசுகள் ஹெலா உயிரணுக்கள் விற்பனை மூலம் கோடி கணக்கில் லாபம் ஈட்டிய ஆய்வகங்களில் இருந்து இழப்பீடு கோரி வழக்குகள் தொடர்ந்தனர்.
ஹெலா உயிரணுக்கள் உள்ளடக்கிய உயிரணு தயாரிப்புகளை உருவாக்கி உற்பத்தி செய்து விற்பனை செய்வதாக தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் நிறுவனத்திற்கு எதிராக முதல் வழக்கை தொடர்ந்த லாக்ஸின் வாரிசுகள் அந்நிறுவனத்திடமிருந்து அறிவுசார் சொத்துரிமை (IP) உரிமையையும் கோரினர். ஹென்ரிட்டா லாக்ஸ் அல்லது அவரது குடும்பத்தினர் அனுமதி மற்றும் ஒப்புதல் இன்றி தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் நிறுவனம் தனது சொந்த லாபத்திற்காக லாக்ஸின் மரபணுப் பொருளை கையகப்படுத்தியது என்பது வழக்கின் முக்கிய அம்சமாகும்.
தெர்மோ ஃபிஷருக்கு எதிரான வழக்கிற்கு முன்பு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை மருத்துவர்களின் சட்டவிரோத நடத்தையை (the unlawful conduct) குறிப்பிட்டு மருத்துவமனை நிர்வாகத்தினரிடமிருந்து ஹென்ரிட்டா லாக்ஸின் குடும்பத்தினர் இழப்பீடு பணம் கேட்டனர்.
ஆனால் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஹெலா உயிரணுக்களை விற்கவில்லை என்றும் அதனை விநியோகம் செய்யும் போது மருத்துவமனை எவ்வித லாபமும் ஈட்டவில்லை என்றும் ஹெலா உயிரணு வரிசைக்கான உரிமத்தினை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் வைத்திருக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை அறிவியல் ஆராய்ச்சிக்காக ஹெலா உயிரணுக்களை இலவசமாக அறிவியலாளர்களுக்கு வழங்கியது என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையும் ஜார்ஜ் கீயும் லாக்ஸின் கர்ப்பப்பை வாய் கட்டியிலிருந்து திசுக்களை எடுத்த போது பின்பற்றிய நெறிமுறை சர்ச்சைகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
கடந்த நூற்றாண்டு தொட்டு ஏழை மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை இனம்,சமூகம் மற்றும் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்கவும் மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்தவும் அனைத்து நோயாளிகளிடமிருந்து திசு மாதிரிகளை எடுத்து வருவதாகவும் அதற்கு முறையான ஒப்புதல் தேவையில்லை என்றும் மருத்துவமனை பதிலளித்தது.
பல நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் தானே அறியாமல் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த ஆப்ரிக்க அமெரிக்க பெண்ணின் வாழ்க்கை குறிப்பு மற்றும் உயிரணு அறிவியல் கணக்கு குறித்து ரெபேக்கா ஸ்க்லூட் என்ற எழுத்தாளர் தி இம்மார்டல் லைஃப் ஆஃப் ஹென்ரிட்டா லாக்ஸ் என்ற நூலை எழுதிய பிறகுதான் ஹெலா வழக்கு அனைவரின் கவனத்தையும் பெற்றது.
மருத்துவத்தில் பல முன்னேற்றங்களுக்கு காரணமான ஹெலா உயிரணு வரிசையை அங்கீகரிக்கும் விதமாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதன் வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு லாக்ஸ் என்று பெயரிட்டது.
ஹென்ரிட்டா லாக்ஸின் உலகத்தையே மாற்றியமைக்கும் உயில்வழி கொடையினை (legacy) அங்கீகரிக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவன டைரக்டர் ஜெனரல் (தலைமை இயக்குனர்) விருது அவருக்கு வழங்கப்பட்டது.
எந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஹென்ரிட்டா லாக்ஸின் உயிரைப் பறித்ததோ அதனை அகற்ற உருவாக்கப்பட்ட மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஹெலா உயிரணுக்கள் அடித்தளமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம் 2021 ஆம் ஆண்டு கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கான உலக சுகாதார நிறுவன நல்லெண்ண தூதுவர்களாக ஹென்ரிட்டா லாக்ஸ் குடும்பத்தினரை நியமித்தது.
கோவிட் சிகிச்சைகள் உட்பட பல உயிர்காக்கும் புதுமைகளை வியப்பூட்டும் ஹெலா உயிரணுக்கள் நிகழ்த்தியுள்ளன. நோயினால் தான் பட்ட துன்பமும் தனது மரணமும் இவ்வுலகில் மற்றவர்களைக் காப்பாற்றி கொண்டிருப்பதில் ஹென்ரிட்டா லாக்ஸினின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.