Doctor Vikatan: ஸ்பீக்கர் சத்தத்தில் அடைத்துக்கொண்ட காது... பிரச்னையாகுமா, தடுக்க முடியுமா?
Doctor Vikatan: கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு கோயிலில் விசேஷம். சாலையோரத்தில் மிகப்பெரிய ஸ்பீக்கர் வைத்து பக்திப் பாடலை ஒலிக்கவிட்டிருந்தனர். ஒரு நொடி அந்த ஸ்பீக்கர் இருக்கும் இடத்தைக் கடந்தேன். சட்டென்று காது அடைத்துக் கொண்டுவிட்டது. அவ்வளவு இரைச்சல்... அதன்பிறகு சில மணி நேரத்துக்கு அந்த பாதிப்பு இருந்தது. இது எதிர்காலத்தில் ஏதாவது பிரச்னையை உண்டாக்குமா? இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தப்பிக்க ஏதாவது யோசனைகள் இருக்கின்றனவா... காதில் பஞ்சு வைத்துக் கொள்வது போல, சின்னஞ்சிறு கருவிகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
ஸ்பீக்கர் சத்தம் மாதிரியான அதிக அளவு சத்தத்தைக் கேட்பதால் உள் காதில் உள்ள நரம்புப் பகுதி பாதிக்கப்படும். அப்போது காது கேட்கும் திறன் குறைந்து காதில் இரைச்சலும் ஏற்படும். இதற்கு 'டெம்பரரி த்ரெஷ்ஹோல்டு ஷிஃப்ட்' (temporary threshold shift) என்று பெயர்.
மிகவும் குறுகிய காலம் மட்டுமே அந்தச் சத்தத்தை நாம் எதிர்கொள்ளும்போது அந்த நரம்புப் பகுதி பாதிப்பும் தற்காலிகமானதாகவே இருக்கும். சிறிது நேரத்தில் அந்த பாதிப்பு தானாகவே சரி செய்யப்பட்டு நமது கேட்கும் திறனும் நார்மல் ஆகிவிடும். நாள்பட இதுபோல் அதிக சத்தத்தை எதிர்கொண்டால் இந்த பாதிப்பு நிரந்தரமாகலாம்.
சத்தத்தின் அளவு அதிகரிக்கும் போது குறுகிய காலத்திலேயே இந்த பாதிப்பு ஏற்படலாம். 85 டெசிபல் அல்லது அதற்கு அதிகமான சத்தம் இருந்தால் பாதிப்பு உண்டாகும் என்று பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க காதில் அணிந்து கொள்ளக்கூடிய ear plugs, ear muffs போன்ற சின்னஞ்சிறு கருவிகள் உள்ளன. அவற்றை உபயோகிக்கலாம். பொது இடங்களில் அதிக அளவு சத்தம் ஏற்படாமல் இருக்க சட்டங்கள் உள்ளன. இவை முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டாலே இத்தகைய பாதிப்புகள் நேராமல் பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.