கை நடுக்கம், கண்ணீர்... விஷாலுக்கு என்ன ஆனது?
நடிகர் விஷால் மத கஜ ராஜா புரமோஷனில் பேசிய விடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.
ஆனால், அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.
தற்போது, இப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் வெளியீடாக ஜன. 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: சூர்யாவுக்கு வில்லனாக ஆர். ஜே. பாலாஜி!
இந்த நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்வில் சுந்தர். சி, விஜய் ஆண்டனி, விஷால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் விஷால் பேசும்போது, அவரால் சரியாக ஒலிவாங்கியை (மைக்) பிடிக்க முடியாத அளவிற்கு கை நடுங்கிக்கொண்டே இருந்தது.
மேலும், பேசும்போதும் அமர்ந்திருந்தபோதும் விஷால் கண்ணீர் விட்டபடி இருந்தார். இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
விஷாலின் உடல் நலம் பாதிக்கப்பட்டதிற்குக் காரணம் வைரல் காய்ச்சல் என தொகுப்பாளினி தெரிவித்திருந்தார். ஆனால், காய்ச்சலால் ஒருவர் ஆளே மாறுவாரா? வேறு ஏதோ பிரச்னை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம், உடல்நிலை சரியில்லாதபோதும் புரமோஷனில் கலந்துகொண்ட விஷாலுக்கு பாராட்டுகளும் கிடைத்துள்ளன.