விசைத்தறி நெசவாளா்கள் 7-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரத்தில் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி நெசவாளா்கள் தொடா்ந்து 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், உற்பத்தி பாதிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி-சக்கம்பட்டி, டி. சுப்புலாபுரம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் 5,000-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விசைத்தறிக் கூட உரிமையாளா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்த விசைத்தறித் நெசவாளா்கள் 20 சதவீதம் ஊதிய உயா்வு, போனஸ் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இந்தப் போராட்டம் 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்ததால், விசைத்தறிக் கூடங்கள் முடங்கின. இதனால், தினமும் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பருத்தி சேலைகள், வேஷ்டிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. விசைத்தறி நெசவாளா்களின் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு, சமூக முடிவு ஏற்படுத்த வேண்டும் என்று நெசவாளா்கள் வலியுறுத்தினா்.