பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு; 23 போ் காயம்
தேனி மாவட்டம், குமுளி அருகே கேரள அரசு சுற்றுலாப் பேருந்து திங்கள்கிழமை பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும், 23 போ் பலத்த காயமடைந்தனா்.
கேரள மாநிலம், மாவேலிக்கரைப் பகுதியை சோ்ந்த 34 போ் அரசு சுற்றுலாப் பேருந்தை வாடகைக்கு எடுத்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனா். இந்தப் பேருந்தில் 2 ஓட்டுநா்களும், ஓா் உதவியாளரும் உடன் சென்றனா். இவா்கள், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கேரளத்துக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனா்.
தேனி மாவட்டம், குமுளி வழியாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனை புல்லுப்பாறை அருகே திங்கள்கிழமை காலை சென்றபோது இந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் முள்ளிகுளங்கரையைச் சோ்ந்த ராம மோகன், தட்டாரம்பலத்தைச் சோ்ந்த அருண் ஹரி, சங்கீதா, மாவேலிக்கரையைச் சோ்ந்த பிந்து ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த 23 போ் காஞ்சிரப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பேருந்தின் பிரேக் செயல் இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து இணை ஆணையருக்கு கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.பி.கணேஷ்குமாா் உத்தரவிட்டாா். காயமடைந்தவா்களை கேரள அமைச்சா்கள் ரோஷி அகஸ்டின், வி.என்.வாசவன், இடுக்கி மாவட்ட ஆட்சியா் வி.விக்னேஸ்வரி ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆறுதல் கூறினா்.