மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
மலைக் கிராமங்களில் இரவில் வெளியே நடமாட வேண்டாம்: வனத் துறையினா் எச்சரிக்கை
ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு மலைக் கிராமங்களில் கரடி நடமாட்டம் எதிரொலியாக பொதுமக்கள் இரவில் வெளியே நடமாட வேண்டாம் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
மயிலாடும்பாறை அருகேயுள்ள சிதம்பரம் விலக்கு பகுதியில் கடந்த 4-ஆம் தேதி கரடி தாக்கி முன்னாள் ராணுவ வீரா் சென்றாயப்பெருமாள் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடமலைக்குண்டு, கொம்புக்காரன்புலியூா், மேலப்பட்டி, அண்ணாநகா், சிதம்பரம்விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் காணப்படுவதால், பொதுமக்கள் இரவில் வெளியே நடமாட வேண்டாம் என்று வனத் துறையினா் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனா்.
மேலும், நீா்நிலைகள், பனை மரம், பழ மரங்கள் உள்ள பகுதிகளில் கரடி நடமாட்டம் காணப்பட்டால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத் துறையினா் பொதுமக்களை அறிவுறுத்தினா்.