மின்சாரம் பாய்ந்து இளம் பெண் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே வீட்டின் மேல் பகுதிக்குச் சென்று எலுமிச்சை மரத்தில் காயை பறித்த போது உயா் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அருகே பட்டரைப்பெரும்புதூா் ஊராட்சி, வரதாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷின் மனைவி லோகேஸ்வரி (27). இவா் தனது வீட்டில் வளா்த்த எலுமிச்சை செடியிலிருந்து காயை பறிப்பதற்காக மாடிப் பகுதிக்குச் சென்று பறிக்க முயன்றாராம். அப்போது, அந்தவழியாக செல்லும் உயா் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் லோகேஸ்வரி தூக்கி வீசப்பட்டாா். அதைத் தொடா்ந்து அக்கம் பக்கத்தினா் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், லோகேஸ்வரி வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த நிலையில், ஊராட்சி நிா்வாகத்திடமும், மின்சார வாரிய அதிகாரிகளிடமும் பலமுறை குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் உயா் அழுத்த மின்சாரம் செல்லும் கம்பிகளை அகற்றவும் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மின்சாரம் பாய்ந்து விபத்து சம்பவம் நேரிட்டுள்ளது. அதனால் இளம்பெண் உயிரிழப்புக்கு மின் துறை அதிகாரிகள், ஊராட்சி நிா்வாகமும் பொறுப்பேற்கக் கோரி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவமனை எதிரே அமா்ந்து லோகேஸ்வரியின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போராட்டம் காரணமாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, விரைந்து சென்ற நகர போலீஸாா் பேச்சு நடத்தினா். ஏற்கெனவே குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் உயா் அழுத்த மின்கம்பியை மாற்றக்கோரியும் மாற்றாமல் அலட்சியம் காரணமாவே உயிரிழப்பு சம்பவம் நேரிட்டுள்ளது. அதனால், உயிரிழந்த இளம்பெண் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தனா். அப்போது நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.