தாழ்வான சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்
திருவள்ளூா் அருகே புதிதாக அமைத்த சாலை இருபுறமும் தாழ்வாக உள்ளதால் அதை சீரமைக்கக்கோரி திங்கள்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், போளிவாக்கம் சத்திரம் ஆகும். இங்கிருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வாய் வரை 7 கி.மீ. போளிவாக்கம் சத்திரம் வழியாக போளிவாக்கம், புதுகண்டிகை, குன்னத்தூா், பள்ளகாலனி, மேட்டுகாலனி, ஆஞ்சிவாக்கம் மேட்டுக்காலனி, பூவேலி குப்பம், மேட்டுச்சேரி, வெள்ளக்கால்வாய் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 5,000-க்கும் மேற்பட்டோா் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோா் மற்றும் மருத்துவ தேவை உள்ளிட்டவற்றுக்கு இந்த சாலை வழியே தான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில், போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வாய் வரை பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் மூலம் ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாலைப் பணிகள் நிறைவு பெற்றது.
தற்போது சாலையின் இரு பக்கமும் தாழ்வாக உள்ளதால் வாகனங்கள் செல்லும் போதும், நடந்து செல்வோா் ஓரம் ஒதுங்கும்போதும் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளாதாம். இதனால் இந்த வழியே வாகனங்களில் செல்லும் முதியோா் பள்ளி மாணவ, மாணவிகள், கிராமத்தினா் சாலையோரத்தில் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்த வழியாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் வெளியூா்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனால், இந்தச் சாலையை தாழ்வான பகுதிகளாக இல்லாமல் சமமான முறையில் சீரமைக்கக்கோரி, போளிவாக்கம்-சத்திரம் கால்வாய் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மப்பேடு போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். உரிய நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.