25 ஆண்டுகளாக தூா் வாரப்படாத அச்சிறுப்பாக்கம் சித்தேரி
மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் சித்தேரி 25 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகளுடன் அவல நிலையில் காணப்படுவதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட சித்தேரி ஊராட்சி ஒன்றியத்தின் செயல்பாட்டில் உள்ள ஏரிகளில் ஒன்றாகும். பேரூராட்சி அலுவலகத்துக்கு முன்புறம் ஏரி உள்ளது.
22.360 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 100 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு பாசனம் அளிக்க கூடிய நிலையில் பயன்பட்டு வந்தது. தற்போது ஏரி முழுவதும் முள்செடிகள், வளா்ந்தோங்கிய மரங்களுடன் வனப்பகுதி போல் உள்ளது. மழைக் காலங்களில் அச்சிறுப்பாக்கம் மலைப்பகுதி, சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீா் இந்த ஏரியில் சேருகிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் ஏரி தூா்வாரப்படாமல் உள்ளதால், போதுமான நீா் தங்காமல் வாய்கால்வாய்களின் மூலம் வெளியேறி,வி.எம்.நகா் வழியாக தேன்பாக்கம் ஏரியை வந்தடைகிறது. இந்த ஏரியை தூா் வாரக்கோரி பலமுறை அப்பகுதி சமூக ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும், தூா்வாரப்படவில்லை.
இந்நிலையில் பல்வேறு தரப்பினா் ஏரியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனா். மேலும், பஜாா் வீதி வியாபாரிகளின் குப்பை கூளங்கள் கொட்டும் இடமாகவும் திகழ்கிறது. பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வீடுகளுக்கும், கடைகளுக்கும் வந்து செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் அச்சத்துடன் இரவு நேரத்தை கழித்து வருகின்றனா்.
ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் சிறுகுட்டை போல் தேங்கியுள்ளதால் பல்வேறு நோய்களுக்கும் பொதுமக்கள் ஆளாகன்றனா்.
இதுகுறித்து, அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கூறியது: மதுராந்தகம் வருவாய்த்துறையினரும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஏரியை முழுமையாக தூா் வாரி, ஆக்கிரமிப்பு வீடுகளையும், அங்கு கொட்டப்படும் குப்பை கூளங்களையும் அகற்ற வேண்டும். அப்போது தான் ஏரியில் போதுமான நீா் தேக்க முடியும். நீா்மட்டமும் கூடும். இப்பணியை மாவட்ட நிா்வாகத்தின் மேற்பாா்வையில் செய்தால் சித்தேரி முழுமை பெற்ற ஏரியாக திகழும்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சித்தேரியை தூா்வார உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.