Budget 2025: `40 கோடி பெண்கள்' -பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?
அடுத்த மாதம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தப் பட்ஜெட்டில் தொழில் அல்லது வேலைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது தொடர்பாக அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. ஆனால், பெண்களின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கைப்போல, தொழில்துறையில் அவர்களது எண்ணிக்கை குறிப்பிடுவதுப்போல அல்ல.
முன்னரை விட, பெண்கள் இப்போது அதிகம் வேலை மற்றும் தொழில் துறையில் தங்களது பங்களிப்பை செலுத்தினாலும், மேலும், இன்னும் அதிக அளவிலான பெண்கள் தொழில்துறைக்கு வர வேண்டும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2022-23 காலக்கட்டத்தில் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 35.9 சதவிகிதமாகவும், ஒழுங்குப்படுத்தப்படாத தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 37 சதவிகிதமும் இருந்திருக்கிறது.
2047-ம் ஆண்டிற்குள் இந்தியா 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிட வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படுகிறது. இதை அடைய, பெண்களின் பக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரத்திற்கு 14 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பங்களிப்பை செலுத்த இன்னமும் 40 கோடி பெண்கள் தொழில்துறை அல்லது வேலைகளுக்கு வர வேண்டும்.
அதற்கு 2047-ம் ஆண்டிற்குள் பெண்களின் பங்களிப்பு 37 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதமாக உயர வேண்டும். இதையொட்டி, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பெண்களை ஊக்கப்படுத்த சில திட்டங்கள் வகுக்கப்படும். இந்தப் பட்ஜெட்டிலும் இது பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.