Bigg Boss 8 Grand Finale: முத்து பிக்பாஸ் டைட்டில் வென்ற எமோஷனல் தருணங்கள்| Phot...
`பர்த்டே டூட்டி’: கதிர் ஆனந்த்துக்கு சல்யூட் அடித்து சால்வை அணிவிப்பு - சர்ச்சையில் வேலூர் போலீஸ்!
தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் தனது 50-வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடினார்.
கதிர் ஆனந்த் பிறந்த நாள் கொண்டாடியதில், காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் தான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் கதிர் ஆனந்த் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதற்கான அறிவிப்பு அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மூலமாக ஒருநாள் முன்னதாகவே வெளியிடப்பட்டன. தடபுடலாக விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாழ்த்து தெரிவிக்க வந்த அனைவருக்குமே `மட்டன் பிரியாணி’ பரிமாறப்பட்டது.
காலை 9 மணி முதல் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார் கதிர் ஆனந்த். கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி, வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் உட்பட வேலூர், திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் பலரும் நேரில் வந்து பரிசுகளைக் கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்துவிட்டுச் சென்றனர். தந்தையும், அமைச்சருமான துரைமுருகனின் அதிகாரப்பூர்வ தனிப்பட்ட வலைதள பக்கங்களிலும், இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
காவல்துறை அதிகாரிகளும் கட்சியினரைப்போல் சால்வை மற்றும் பரிசுகளுடன் மேடை ஏறி கதிர் ஆனந்த்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். டி.எஸ்.பி-க்கள் திருநாவுக்கரசு (குற்றப்பிரிவு), பழனி (காட்பாடி) மற்றும் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்டோர் மிகுந்த ஆர்ப்பரிப்புடன் மேடை ஏறி கதிர் ஆனந்த்துக்கு சால்வை போர்த்திவிட்டு `சல்யூட்’ அடித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இத்தனைக்கும் காவல்துறை அதிகாரிகள் காக்கிச் சீருடையில் (யூனிஃபார்ம்) இருந்தனர்.
அடுக்கப்படும் இவ்வளவு விமர்சனங்களுக்கும் இன்னும் சில முக்கிய காரணங்களும் இருக்கின்றன. ``காட்பாடி சட்டமன்றத் தொகுதி, வேலூர் எம்.பி-யின் கட்டுப்பாட்டில் கிடையாது. அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. கதிர் ஆனந்த் காட்பாடியில் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை அவர் ஏற்பாடு செய்த தனிப்பட்ட நிகழ்ச்சியாகவே பார்க்க முடியும். அப்படியிருக்கும்போது, காவல்துறையினர் கண்ணியம் தவறி எப்படி செயல்படலாம்’’ என்கிற விமர்சனத்தை எதிர்க்கட்சியினர் முன் வைக்கின்றனர்.
எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. காரணம், வேலூர் மாவட்டக் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிவிப்பு தான் சர்ச்சைக்கு மூலகாரணமாக மாறியிருக்கிறது. கதிர் ஆனந்த் பிறந்த நாள் கொண்டாடக்கூடிய அவரின் வீடு, விருதம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியக்கூடிய 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 40 காவலர்களை விழா நடைபெறக்கூடிய கதிர் ஆனந்த் வீட்டுப் பகுதியில் காலை 9 மணியில் இருந்தே டூட்டி பார்க்கச் சொல்லி, காவலர்களின் பெயர், செல்நம்பர்களுடன்கூடிய பட்டியல் வெளியிடப்பட்டது.
காட்பாடியை உள்ளடக்கிய அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜெகத்ரட்சகன் தான் எம்.பி-யாக இருக்கிறார். அப்படியிருக்கும்போது, கதிர் ஆனந்த்தின் தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டதா, அப்படி கொடுத்திருந்தாலும் காவல்துறையினரின் நடைமுறை இதுதானா என்கிற குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்புகின்றனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், `Birthday டூட்டி’ என்பதை `B டூட்டி’ என சுருக்கமாக சந்தேகம் வராமல் குறிப்பிட்டிருக்கின்றனர்.
மொத்தத்தில் ஒரு அரசியல் நிகழ்ச்சியாகவே கதிர் ஆனந்த்தின் பிறந்த நாள் நிகழ்ச்சியும் நடந்தேறியது. ஏற்கெனவே, ``போலீஸார் யாருக்கெல்லாம் `சல்யூட்’ அடிக்க வேண்டும் என்கிற காவல் நிலைய ஆணை விதிகள் தெளிவுப்படுத்தியிருக்கின்றன. குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், கேபினட் அமைச்சர்கள், நீதிபதிகள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்குத்தான் போலீஸார் கட்டாயமாக சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமின்றி, காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பணிநிலைகளுக்கு ஏற்ப சல்யூட் அடிக்க வேண்டும். ஆனால், காவல் நிலை ஆணை விதிகளில் எந்த இடத்திலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கோ, சட்டமன்ற உறுப்பினருக்கோ சல்யூட் அடித்து மரியாதை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை’’ என காவல்துறை உயரதிகாரிகளே தெரிவிக்கின்றனர். நடைமுறை ஆணையை மீறி வேலூர் மாவட்டக் காவல்துறையினர் செயல்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.