Erode East ByPoll: ``அராஜகத்தின் உச்சம்; பிரசாரத்துக்கு அனுமதி இல்லை.." -கொதிக்கும் நாதக வேட்பாளர்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று சீதாலட்சுமி பிரசாரத்தை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீதாலட்சுமி, "எனது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகும், பிரசாரம் செய்வதற்கு அனுமதி தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். 5 பேருடன் சென்றுதான் பிரசாரம் செய்ய வேண்டும் என்கின்றனர். அதற்கும் நான் சம்மதித்தேன். ஆனால், இன்று என் பிரசாரத்துக்கு அனுமதி இல்லை என்கின்றனர். கடந்த 2023 இடைத் தேர்தலின்போது மக்களை அரசியல் கட்சியினர் சந்திக்க கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளைப் போல் பட்டியில் அடைக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் வேட்பாளரான என்னை பிரசாரம் செய்யவிடாமல் திமுகவினர் தடுக்கின்றனர். அதற்கு காவல் துறையும், அதிகாரிகளும் துணை போகின்றனர். இதை அராஜகத்தின் உச்சமாகத்தான் பார்க்க முடிகிறது. ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்து களத்தில் நின்றோம். ஆனால், இனிமேலும் எங்களால் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. மக்களை சந்திக்கப் போவதை நிறுத்த மாட்டேன்.
எத்தனை வழக்குகள் போட்டாலும் இதை சந்திக்கத் தயாராக உள்ளேன். காவல்துறை வழக்குகள் போடப்போட, அதை எங்களுக்கான பிரசாரமாகவே பார்க்கிறேன். இது நாம் தமிழர் கட்சிக்கு வாக்கை அதிகரிக்கத்தான் செய்யும். எங்களுக்கு எதிரான வேலைகளில் திமுக ஈடுபட்டால் இருக்கக்கூடிய கொஞ்ச கால ஆட்சியும் கூண்டோட அழிந்துவிடும். திராவிடம் முழுமையாக அழிந்து விடுவதற்கான சூழலும் ஏற்படும்.
இந்த மண்ணில் இருந்து திமுக வேரோடு புடுங்கி எறியப்படும். இரண்டு பேர் சென்றால் கூட வழக்கு போடப்படுவதாக காவல்துறை கூறுகிறது. காவல் நிலையத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி வேண்டி மனு கொடுத்தும் முறையான காரணம் இல்லாமல் அனுமதி மறுக்கப்படுகிறது" என்றார்.