95 சதவிகித டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன; முதல் டி20 போட்டிக்கு தயாராகும் ஈடன்...
ஷாரோன் ராஜ் கொலை: கருணை கடிதம் எழுதிய கிரீஷ்மா; அரசு வக்கீல் ஆவேசம்... நாளை வெளியாகும் தீர்ப்பு..!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பாறசாலையை சேர்ந்த ஜெயராஜன் - பிரியா தம்பதியின் மகன் ஷாரோன் ராஜ். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ்மா(24). கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு படித்துவந்த ஷாரோன்ராஜிக்கும், அழகியமண்டபம் பகுதியில் கல்லூரியில் எம்.ஏ படித்து வந்த கிரீஷ்மாவுக்கும் 2021-ம் ஆண்டு காதல் ஏற்பட்டது. கல்லூரிக்குச் சென்றுவர இருவரும் ஒரே பஸ்ஸில் பயணித்ததால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
ஷாரோன் ராஜின் ரெக்கார்ட் நோட்டுக்களை கிரீஷ்மா எழுதிக்கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களிலும் சென்று காதலை வளர்த்துள்ளனர். இதற்கிடையே கிரீஷ்மாவுக்கும் பெற்றோர் வரன் பார்த்து ராணுவவீரர் ஒருவருடன் நிச்சயம் செய்துள்ளனர். ராணுவவீரரை திருமணம் செய்ய முடிவு செய்த கிரீஷ்மா காதலன் ஷாரோன் ராஜிடம் தன்னை மறந்துவிடும்படி கூறியுள்ளார். ஆனாலும், ஷாரோன்ராஜ் கிரீஷ்மாவை காதலித்துவந்ததாக தெரிகிறது.
ஷாரோன்ராஜை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார் கிரீஷ்மா. ஜூஸில் டோலோ மாத்திரைகளை கலந்து ஜூஸ் சேலஞ்ச் நடத்தி அதை ஷாரோன்ராஜை குடிக்க வைத்துள்ளார். அதை குடித்த ஷாரோன்ராஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்பு சரியானது. இதற்கிடையே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி கிரீஷ்மா தனது வீட்டுக்கு ஷாரோன்ராஜை அழைத்துள்ளார். ரெக்கார்ட் நோட்டுக்களை வாங்க கிரீஷ்மா வீட்டுக்கு போக வேண்டும் என நண்பர் ரெஜினுடன் பைக்கில் சென்றுள்ளார் ஷாரோன்ராஜ். கிரீஷ்மா தனது வீட்டில்வைத்து பூச்சிமருந்து கலந்த கஷாயத்தை ஷாரோன்ராஜிக்கு கொடுத்துள்ளார். கிரீஷ்மா வீட்டில் இருந்து வெளியே வந்த ஷாரோன்ராஜ் வாந்தி எடுத்துள்ளார். நண்பரின் பைக்கில் வீட்டுக்குச் சென்ற ஷாரோன்ராஜ் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அன்றைய தினமே பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மேலும் மோசமானதால் உயர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். 2022 அக்டோபர் 25-ம் தேதி ஷாரோன்ராஜ் இறந்தார்.
இந்த வழக்கில் கிரீஷ்மா-வின் தாய் சிந்து, தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோர் 2 மற்றும் 3-ம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியேவந்தனர். நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில் ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் கிரீஷ்மா மற்றும் விஷம் வாங்கிகொடுத்த அவரது தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோர் குற்றவாளிகள் என கடந்த 17-ம் தேதி கோர்ட் கூறியுள்ளது. கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட உள்ளதாக கோர்ட் தெரிவித்த நிலையில் தண்டனை விபரம் நாளை (ஜன.20) அறிவிக்கப்படும் என கோர்ட் தெரிவித்துள்ளது.
நெய்யாற்றின்கரை கோர்ட்டில் நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது கிரீஷ்மா ஒரு கடிதத்தை கோர்ட்டில் சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில் கிரீஷ்மா கூறியுள்ளதாவது:
நான் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளேன். இன்னும் படிக்க வேண்டும். எனக்கு 24 வயதுதான் ஆகிறது. எனவே தண்டனையில் இயன்ற அளவு கருணைகாட்ட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார். கடிதத்துடன் தனது படிப்புக்கான சான்றிதழ்களையும் கோர்ட்டில் சமர்பித்திருந்தார்.
அதே சமயம் இந்த வழக்கு அபூர்வத்திலும், அபூர்வமானது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். ஒரு இளைஞனின் காதலை கொன்றிருக்கிறார். காதலிப்பதாக நடித்து வீட்டுக்கு அழைத்து கொலை செய்துள்ளார். கொடூரமான ஒரு குற்றவாளியால் மட்டுமே இப்படிப்பட்ட கொடூரத்தை செய்ய முடியும். மிகத்துல்லியமாக திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளார். ஷாரோன்ராஜ் 11 நாள்கள் மருத்துவமனையில் பட்ட வேதனைகள் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உள்ளது. இது தற்செயல் கொலையல்ல முன்கூட்டியே திட்டமிட்டதாகும். ஷாரோன்ராஜிக்கும் நிறைய கனவுகள் இருந்தன. அந்த கனவுகளை கிரீஷ்மா தகர்த்துவிட்டார். கிரீஷ்மா எதற்கும் வருத்தப்படமாட்டார். கிரீஷ்மா பிசாசின் சுபாவம் கொண்டவர், எனவே அவர் கருணைக்கு தகுதியற்றவர். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டிருந்தார். இந்த வழக்கில் என்ன தண்டனை கோர்ட் அறிவிக்கும் என்பது நாளை (டிச..20) தெரியவரும்.
Vikatan Play
விரிவாக பேசுகிறது மதன் எழுதிய Blockbuster தொடரான வந்தார்கள் வென்றார்கள் நூல். இப்போது நீங்கள் Vikatan Play-ல் இலவசமாக audio வடிவில் கேட்கலாம்
Vikatan App ஐ Download செய்யுங்க வந்தார்கள் வென்றார்கள் புத்தககத்தைக் கேளுங்க