பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூரில் வாகன நெரிசல்
``ஹெல்மெட் இல்லையென்றால் பெட்ரோல் இல்லையா?'' - பெட்ரோல் பங்கில் மின்சாரத்தை நிறுத்திய லைன்மேன்..!
உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற விதியை கொண்டு வர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரபிரதேச மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஹாப்பூர் மாவட்ட ஆட்சியர் `ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விநியோகம் செய்யக்கூடாது’ என்று அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, அங்கிருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விநியோகம் செய்யாமல் இருந்தனர்.
இந்நிலையில், ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்ப ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த மின்சாரத்துறை லைன்மேன் ஊழியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பச் சொல்லி இருக்கிறார். உடனே பங்க் ஊழியர், ‘ஹெல்மெட் இல்லை என்றால், பெட்ரோல் இல்லை’ என்று கூறி பெட்ரோல் நிரப்ப மறுத்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் நிரப்பக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூறியுள்ளார். இதனை கேட்டு கோபமாக அந்த இடத்தை விட்டு கிளம்பினார் அந்த லைன்மேன். அவர் சென்ற பிறகு அந்தப் பெட்ரோல் பங்க் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்கு இருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு அந்த பெட்ரோல் பங்க் நிலையத்திற்கு மின்விநியோகம் சீரானது. இது குறித்து அந்தப் பெட்ரோல் பங்க் உரிமையாளர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இது குறித்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், பெட்ரோல் பங்க் நிலையம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அந்த லைன்மேன் ஏறி மின்சார விநியோக கம்பியை துண்டித்ததை CCTV கேமராக்கள் மூலம் பார்த்து உள்ளனர்.
இதனை அறிந்து ஹாப்பூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற புதிய விதி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிய போர்டுகளில் விழிப்புணர்வு பதாகைகளை பெட்ரோல் பங்க் நிலையத்தில் அமைக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெட்ரோல் பங்க் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறி உள்ளார்.
தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க் நிலையத்திற்கு மின்சாரத்தை துண்டித்த மின்வாரிய ஊழியரின் செயலால் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.