`மாதம் 1500 ரூபாய்' -4000 பெண்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் மகாராஷ்டிரா...
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரஷிய ராணுவத்திற்கு ஆட்களை அனுப்பிய கும்பல் கைது!
கேரளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரஷிய ராணுவத்திற்கு ஆள்களை அனுப்பும் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கேரளத்தில் பினில், அவரது உறவினர் ஜெயின் குரியன் ஆகியோரை கடந்தாண்டு ஏப்ரலில் பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற வேலைகள் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கும்பல் ரஷியா அனுப்பி வைத்தனர்.
ரஷியா சென்றதும் அங்குள்ள ஆள்கள் மூலம் அவர்களின் கடவுச்சீட்டை கைப்பற்றிய மோசடிக் கும்பல் இருவரையும் ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்தனர். இந்த நிலையில், ரஷிய ராணுவத்தில் பணியாற்றியபோது டிரோன் தாக்குதலில் பினில் பலியானதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவரது மனைவி ஜாய்சி ஜான் வடக்கஞ்சேரி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சந்தீப் தாமஸ் (40), சுமேஷ் ஆண்டனி (40) ஆகியோரைக் காவல்துறையினர் நேற்று (ஜன. 18) கைது செய்திருந்தனர். மேலும், இன்று திரிச்சூரைச் சேர்ந்த சிபி என்பவரைக் கைது செய்துள்ளனர்.
இந்தக் கும்பல் ரஷியாவில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி அழைத்துச் சென்று கடவுச்சீட்டை கைப்பற்றி ரஷிய ராணுவத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தியுள்ளனர். இவ்வாற்று பணியாற்றும் நபர்கள் ரஷிய ராணுவத்தால் போரின் முன்னணியில் செயல்பட கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குடியேற்றச் சட்டம், மனிதக் கடத்தல், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பினில், ஜெயின் ஆகியோரப் போன்று பல இந்திய இளைஞர்கள் இவர்களால் ஏமாற்றப்பட்டதாகவும், இவர்களுக்குத் தலைவனாக செயல்பட்டு வரும் சந்தீப் தாமஸ் ரஷியாவில் வாழ்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அந்த நபர் ரஷியாவில் இருந்து கேரளத்தின் பல மாவட்ட இளைஞர்களை தனது ஆள்களின் மூலம் ஏமாற்றி ரஷியா அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராயை தூக்கிலிட்டாலும் வரவேற்பேன்! -குற்றவாளியின் தாயார்
இதில், கைது செய்யப்பட்ட சுமேஷ் இடைத்தரகராகவும், சிபி ஆள்களைப் பிடிக்க உதவியதாகவும் காவல்துறையினர் கூறினர்.
கடந்த சில மாதங்களில் இவ்வாறு ரஷிய ராணுவத்தில் பதிவான இரண்டாவது மரணம் இதுவாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் திரிச்சூரைச் சேர்ந்த சந்தீப் என்பவர் ரஷிய ராணுவத்தில் பணியாற்றியபோது இதேபோல டிரோன் தாக்குதலில் பலியானது குறிப்பிடத்தக்கது.
வேலை வாய்ப்பு என்ற போர்வையில் இந்திய இளைஞர்களை ரஷிய ராணுவ சேவையில் ஈடுபடுத்தும் இந்தக் கும்பல் முழுமையாக விசாரணை நடத்தப்படும் எனக் காவல்துறையினர் உறுதியளித்தனர்.