யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சந்திக்கலாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர்: ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சென்று சந்திக்கலாம். அவர்களின் குறைகளை கேட்டு அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயம் அரசு அந்த மக்களின் குறைகளை ஆராயும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஞாயிற்றுக்கிழமை விருதுநகரில் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, ஒரு புதிய விமான நிலையத்தை உருவாக்குவது என்பது அந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்தியாவின் மற்ற பெரிய நகரகங்களான தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் , பெங்களூரூ ஆகிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும் போது சென்னை விமான நிலையம் மிகச்சிறியதாக இருக்கிறது. தில்லி விமான நிலையம் ஏறத்தாழ 51 ஆயிரம் ஏக்கரிலும் , மும்மை 1150 ஏக்கர் , ஹைதராபாத் 5500 ஏக்கர் , பெங்களூரு 4000 ஏக்கரிலும் அமைந்துள்ளது. ஆனால் சென்னை விமான நிலையம் 1000 ஏக்கரில் தான் அமைந்துள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டுக்கு 2 கோடி நபர்கள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் இது 3 கோடியை தாண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் 8 கோடி பயனாளிகள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என மதிப்பிடப்படுகிறது.
சென்னையில் ஏற்கனவே குடியிருப்புகள் அதிகமாகிவிட்டதால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது. எதிர்காலத்தையும் மனதில் வைத்தே திமுக ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதாரம் , மாநிலத்தில் வளர்ச்சி என அனைத்து அந்த மாநிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தே அமையும்.
நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
டைடல் பார்க் போன்றவை எதிர்கால நோக்குடன் அமைக்கப்பட்டதால் தான் தகவல் தொழில்நுட்பத்தில் வளர முடிந்தது. அதுபோல தான் பரந்தூர் விமான நிலையமும். பொருளாதார புரட்சிக்கு அடிகோலாக பரந்தூர் விமான நிலையம் எதிர்காலத்தில் அமைந்திருக்கும். பயனிகளின் வசதி என்பதை தாண்டி , தொழில் வளர்சிக்கும் இந்த விமான நிலையம் தேவையானதாக இருக்கின்றது.
தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சந்திக்கலாம்
ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சென்று சந்திக்கலாம். அவர்களின் குறைகளை கேட்டு அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயம் அரசு அந்த மக்களின் குறைகளை ஆராயும்.
பரந்தூர் விமான நிலையம் நிச்சயம் தேவைப்படும் ஒன்றாக இருக்கும் காரணத்தினால் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுவருகிறது. அங்கு இருக்கும் மக்கள் பாதிக்காத வகையில் மறு குடிஅமர்வு செய்வதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வளர்ச்சி ஒருபுறம் என்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதல்வர் கவனமாக இருக்கிறார். பரந்தூர் பகுதியின் நீர்நிலைகளையும் எந்த அளவிற்கு சீர்செய்ய முடியும் என்பதை ஆராய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில்கொள்ளும்.
ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் நம்முடைய தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் முன்னேறுவதுடன் , பெங்களூரு நகரத்தின் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும் என கூறினார்.