உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவனை, அடித்துத் துன்புறுத்தி வன்கொடுமை; 6 பேர் மீது வழக்குப் பதிவு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் 17 வயது பட்டியலினச் சிறுவனை மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கி, இழிவுபடுத்தி தீண்டாமை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பட்டியலின சிறுவன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு டிரம்ஸ் இசைக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த புரட்டாசி மாதம் ஊரில் நடந்த கோயில் திருவிழாவின்போது சிறுவர்களுடன் நடனம் ஆடி உள்ளார். அங்கிருந்த மாற்று சமூகத்தினர், சிறுவனின் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், `வேட்டியை மடித்துக் கட்டி ஆடாதே' எனக் கூறியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாற்றுச் சமுகத்தைச் சேர்ந்த கிஷோரும் அவரது நண்பர்களும் சேர்ந்து சிறுவனைத் தாக்கியதாகவும், இந்த பிரச்னையால் பயந்த அச்சிறுவன் வெளியூரிலுள்ள உறவினர் வீட்டில் தங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள். தகராறில் ஈடுபட்ட தரப்பினர் சிறுவனைத் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் பொங்கலைக் கொண்டாட கடந்த வாரம் சங்கம்பட்டிக்கு வந்த அச்சிறுவனை ஏற்கெனவே தகராறு செய்த கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ், நிதீஷ், மணிமுத்து ஆகியோர் கடத்திச் சென்று கண்மாய் பகுதியில் வைத்துத் தாக்கியுள்ளனர். அவர்களுடன் 20-க்கும் மேற்பட்டோர் அச்சிறுவனை தாக்கி, அனைவரின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்தியும், மேலும் சில சிறுவர்களை வைத்து சிறுநீர் கழிக்க வைத்தும் தீண்டாமை வன்கொடுமை செய்திருக்கின்றனர். தாக்குதலில் தலை, கழுத்து பகுதியில் காயமடைந்து மயங்கி கிடந்த சிறுவனை பெற்றோர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் உசிலம்பட்டி போலீசில் புகார் அளித்தும் மூன்று நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தீண்டமை ஒழிப்பு இயக்க செயற்பாட்டாளர் வழக்கறிஞர் தெய்வம்மாள் எடுத்த தொடர் முயற்சியில் அச்சிறுவனை கடத்திச் சென்று சித்திரவதை செய்த 6 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்களும் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைபிடிக்கப்படும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்கள் அதிகம் உள்ளதில் மதுரை மாவட்டமே முதலிடத்தில் உள்ளது தமிழக காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் இச்சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"சம்பந்தப்பட்ட கிராமங்களில் அதிக அளவில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவதோடு சமூக நல்லிணக்க கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு இதற்காக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்" என்று சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.