நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
Saif Ali Khan: சைஃப் அலிகானை கொடூரமாக தாக்கியது ஏன்? - கைதான வங்கதேச ஆசாமி பகீர் வாக்குமூலம்!
சைஃப் அலிகானை தாக்கியது ஏன்?
மும்பையில் இரண்டு நாள்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் புகுந்த மர்ம நபரால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.
மர்ம நபரை பிடிக்க போலீஸார் 30 தனிப்படைகள் அமைத்திருந்தனர். அக்குழுவினர் நேற்று இரவு ரெய்டு நடத்தியதில் மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்தில் சைஃப் அலிகானை தாக்கிய நபரை கைது செய்தனர். அவரது பெயர் 'மொகமத் ஷெரிபுல் இஸ்லாம்' என்று தெரிய வந்துள்ளது. அவர் பங்களாதேஷை சேர்ந்தவர் என்றும், அவர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு 'விஜய் தாஸ்' என்ற பெயரில் வாழ்ந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
`திருட சென்றது சைஃப் அலிகான் வீடு என்று தெரியாது'
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் தீக்ஷித் கூறுகையில், ''கைது செய்யப்பட்ட நபர் இந்தியர் என்பதற்கான ஆவணம் எதுவும் அவரிடம் கிடைக்கவில்லை. அவர் பங்களாதேஷை சேர்ந்தவராக இருப்பார் என்று நினைக்கிறோம். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சில பொருள்கள் அவர் பங்களாதேசை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக சட்டவிரோதமாக மும்பையில் ஹவுஸ் கீப்பர் வேலை செய்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட மொகமத்திடம் விசாரித்து வருகிறோம். போலீஸாரிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்வதற்காக செடிகளுக்குள் மறைந்து வாழ்ந்து வந்தான்.
குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக நகர் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் சோதனை செய்யப்பட்டது. இதில், அந்தேரி டி.என்.நகர் பகுதியில் அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரித்ததில் அவர் ஒர்லியில் நண்பர்கள் சிலருடன் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் விசாரித்தபோது, மொகமத் போன் நம்பர் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அவன் தானேயில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மறைந்திருந்தான். அவனை நான்கு புறமும் சுற்றி வளைத்து கைது செய்தோம். அவனிடம் விசாரித்தபோது தான் சைஃப் அலிகான் வீட்டிற்குள் திருட செல்கிறோம் என்று தெரியாமல் உள்ளே சென்றுள்ளார். வேலை இல்லாத காரணத்தால் திருட்டில் ஈடுபட முயன்றதாக தெரிவித்தான். கட்டிடத்தின் பின்புற படிக்கட்டு மற்றும் ஏ.சி.க்கான துவாரங்களை பயன்படுத்தி உள்ளே சென்றதாக தெரிவித்துள்ளான்'' என்று தெரிவித்தார்.
அந்த நபரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவனை 5 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.