பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய்; அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன பதில்
தமிழகத்தின் பொருளாதாரம், நிதி மேலாண்மை, மற்றும் கடனைத் திருப்பி செலுத்தும் திறன் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், அவரிடம் பரந்தூர் மக்களை விஜய் சந்திக்கவிருப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
`` பரந்தூர் விமான நிலையம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னை விமான நிலையம் மட்டும் போதாது. எதிர்காலப் போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு உட்கட்டமைப்பு தேவைகள் அவசியமாகின்றன. எதிர்காலத்தில் தொழில்புரட்சிக்கு வித்திடும் ஒன்றாக பரந்தூர் விமான நிலையம் இருக்கும். பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய், அவர்களின் கோரிக்கைகளை அரசுக்குக் கூறலாம். போராடும் மக்களை ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்" என்றார்.