`மாதம் 1500 ரூபாய்' -4000 பெண்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் மகாராஷ்டிரா...
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
சேலம் : சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்திலிருந்தும், கா்நாடகம், புதுச்சேரி, கேரளம் பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நண்பா்கள், குடும்பத்துடன் குவிந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் விடுமுறை தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ஏற்காடு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா, ரோஜா தோட்டம், லேடிசீட், ஜென்சீட், கிளியூா் நீா்விழ்ச்சி, கரடியூா் காட்சி பகுதி, பக்கோட காட்சி பகுதி, மஞ்சக்குட்டை காட்சி பகுதிகளுக்குச் சென்று கண்டு மகிழ்ந்தனா்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...
குறிப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர் விடுமுறை இறுதி நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ஏற்காடு வந்துள்ள இவர்கள் படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர்.
ஏற்காட்டில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.
குளிர் அதிகமாக இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் பனிமூட்டத்தின் மத்தியில் படகு சவாரி செய்தனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் சாலையோரங்களில் உள்ள கடைகளில் பொருள்கள் விற்பனை அதிகரித்தன. சுற்றுலாத் துறைக்கும் கணிசமான வருவாய் கிடைத்தது.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.