தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!
பரந்தூரிலிருந்து கள அரசியல் பயணம் தொடக்கம்: விஜய் அறிவிப்பு
பரந்தூர்: விமான நிலையம் வேண்டும், ஆனால் இந்த இடத்தில் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன் என்று பேசிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரிலிருந்து கள அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு கள அரசியல் பயணத்தைத் தொடங்க நினைத்திருந்தேன். என் பயணத்தைத் தொடங்க இதுதான் சரியான இடம் என எனக்குத் தோன்றியது. எனவே, இன்று பரந்தூரிலிருந்து எனது கள அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினரை தவெக தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகளுக்கும் ஊர் மக்களுக்கும் ஆதரவாக நின்று போராடுவேன் என்றும், பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றும் வலியுறுத்திப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், விமான நிலையத்துக்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையத்தைக் கொண்டு வாருங்கள் என்றும் வலியறுத்தினார்.
ராகுல் என்ற சிறுவன் பரந்தூர் போராட்டம் குறித்து விடியோவில் பேசியிருந்ததைப் பார்த்து மன மாற்றம் ஏற்பட்டது. அதைப் பார்த்துதான் இங்கு வந்தேன். போராட்டத்தில் ஈடுபடும் உங்களுடன் தொடர்ந்து துணை நிற்பேன் என்றும் விஜய் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 900 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை, தவெக தலைவர் விஜய் சந்திக்க அனுமதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மனுவை ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை சென்னையிலிருந்து பரந்தூர் சென்றார் விஜய். பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக தனியார் மண்டபம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் திறந்தவெளி மைதானத்தில் பிரசார வாகனத்தில் நின்றபடி மக்களிடையே உரையாற்றினார் விஜய்.
பரந்தூருக்கு விஜய் வருவதை முன்னிட்டு, தவெக தொண்டர்களும் பரந்தூர் குவிந்ததால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசு ஈடுபட்டு வருகின்றன. விமான நிலையத்துக்காக ஏகனாபுரம், தண்டலம், மகாதேவி, நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட்டதுடன், 5,100 ஏக்கர் வரையில் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன.
இந்த நிலையில், விவசாய நிலங்களைக் கையகப்படுத்தப்படுவதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 900 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டக் குழுவினரை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.