``காலாவதி பதவியும், விலகல் கடிதமும்'' -வேலூரில் பாஜக மோதல்... பின்னணி என்ன?
Sardaar 2 : மிரட்டலான லுக்; பிரமாண்ட செட்; தயாராகும் டீசர் - அடுத்த பட அறிவிப்பு
'மெய்யழகன்' படத்திற்குப் பின் கார்த்தியின் கிராப் எதிர்பார்ப்பிற்குள்ளாகி விட்டது. 'சூது கவ்வும்' இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் 'வா வாத்தியார்', 'சர்தார்' பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் 'சர்தார் 2' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இந்தாண்டின் பொங்கல் வெளியீடாக கார்த்தியின் 'வா வாத்தியார்' எதிர்பார்க்கப்பட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரசிகராக கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. சூர்யாவின் 'ரெட்ரோ' மே மாதம் முதல் தேதி வெளியாவதால், கார்த்தியின் படத்தை ஏப்ரலில் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே 'வா வாத்தியார்' படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு 'சர்தார் 2'விற்குச் சென்றார் கார்த்தி. கார்த்தியின் நெருங்கிய நண்பரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் 'சார்தார்' முதல் பாகத்தைத் தயாரித்திருந்தார். இப்போது அவரே பார்ட் 2 வையும் தயாரித்து வருகிறார். கார்த்தி இதில் ஏஜென்ட் சர்தார் சந்திரபோஸ், விஜய் பிரகாஷ் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.
படத்தின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, கார்த்தியின் ஜோடிகளாக ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர ரஜிஷா விஜயனும் படத்தில் இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
'வா வாத்தியார்', 'சர்தார் 2' இவை இரண்டிற்கும் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் தான் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 'சர்தார்' முதல் பாகத்திற்கும் இவர் தான் காமிராவை கவனித்தார். 'சர்தார் 2'வின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. பிரமாண்டமான செட்கள் அமைத்து, படமாக்கி வருகின்றனர். 'சர்தார்' படத்தில் டபுள் ஆக்ஷன் கார்த்தியின் தோற்றம் பேசப்பட்டது போல, இதிலும் அசத்தலான லுக்குகள் இருக்கின்றன. இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு நடந்திருக்கிறது என்கின்றனர். சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக திண்டுக்கலில் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் ஒரு பாடலை படமாக்க உள்ளனர் என்றும் சொல்கின்றனர்.
இதற்கிடையே கார்த்தியின் 29வது படமாக 'டாணாக்காரன்' தமிழ் படம் இயக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு பீரியட் ஃபிலிம். இயக்குநர் தமிழின் சொந்த ஊர் ராமேஸ்வரம் என்பதால், ராமேஸ்வரம் - இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதையாக இந்தப் படம் இருக்கக்கூடும் என்கிறார்கள். 'சர்தார் 2'வைவிட மிகுந்த பொருட்செலவில் இந்தப் படமும் இருக்கும் என்கின்றனர். படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால், ப்ரீ புரொடக்ஷன் பணிகளும் தீவிரமாகி வருகின்றன. வரும் மே மாதத்தில் கார்த்தியின் பிறந்த நாள் வருகிறது. அன்று, இதன் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டும், 'சர்தார் 2' டீசரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.