ரூ.4 கோடியில் கட்டப்பட்டு ஒன்றரை ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத விபத்து, அவசரகால மருத்துவமனை!
நம்மை காப்போம் திட்டம்-48 மூலம் திருவள்ளூர் அருகே திருமழிசையில் ரூ.4 கோடியில் கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர கால மருத்துவமனை ஒன்றரை ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால், பொதுமக்கள், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருமழிசை-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் திருமழிசை பேரூராட்சி மற்றும் சிட்கோ தொழில்பேட்டை அமைந்துள்ளது. இந்நிலையில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. தற்போதைய நிலையில் ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைபவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காத நிலையில் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதுபோன்ற எதிர்பாரத விதமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சிகிச்சை அளித்து காப்பாற்றும் நோக்கத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து ரூ.4 கோடியில் கடந்த 2022-இல் நம்மை காப்போம்-48 என்ற திட்டம் மூலம் முதன் முதலாக விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனை அமைக்க அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து திருமழிசை தொழிற்பேட்டையில் அனைத்து நவீன வசதியுடன் கூடிய விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனைக்கான புதிய கட்டடம் கட்டும் மும்முரமாக நடைபெற்று வந்தது. கட்டட பணிகள் நிறைவடைந்து கடந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
மருத்துவமனை சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியாக உள்ளது. அதேபோல் விபத்தில் சிக்கியவர்களை எளிதாக கொண்டு செல்லும் வகையில் முறையான சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இரவு நேரங்களில் மது அருந்துவோர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே திருமழிசையில் முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே திருமழிசையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர கால மருத்துவமனையை தொடங்கி வைப்பது மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம். அதன்பேரில் சுற்றுச்சுவர் மற்றும் சாலை சீரமைப்பு வசதிகள் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் சாலை, சுற்றுச்சுவர் பணிகள் முடிந்தவுடன் மருத்துவமனைக்கு தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்படும். அதைத் தொடர்ந்து பணியாளர்களை தேர்வு செய்து விரைவில் மருத்துவமனை திறக்கப்படும் எனத் தெரிவித்தனர்.