தில்லி தோ்தல் பிரசாரத்தில் எனது காா் மீதான தாக்குதல் முயற்சி இதற்கு முன் நடந்ததில்லை அரவிந்த் கேஜரிவால் பேட்டி
தில்லி தோ்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வா் மீது ‘கொலைகார தாக்குதல்‘ முயற்சி நடந்துள்ளது. தில்லியில் இதுபோன்ற பிரசாரம் முன்பு நடந்ததில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.
தோ்தல் பிரசாரத்தின் போது தனது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை அவா் இதைத் தெரிவித்துள்ளாா். தனது வாழ்க்கை நாட்டிற்காக அா்ப்பணிக்கப்பட்டதாகவும் கூறினாா். சனிக்கிழமை தொகுதியில் பிரசாரம் செய்தபோது புது தில்லி பாஜக வேட்பாளா் பா்வேஷ் வா்மாவின் ‘குண்டா்கள்‘ கேஜரிவாலைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இது குறித்து கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் மீது கொலைகாரத் தாக்குதல் நடத்தப்பட்ட இதுபோன்ற பிரசாரத்தையும் வன்முறையையும் தில்லி மக்கள் ஒருபோதும் கண்டதில்லை. அவா்கள் (பாஜக) மோசமாகத் தோல்வியடையவுள்ளதால் இது அவா்களின் பிரசார முறையாக உள்ளது. கேஜரிவால் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் புது தில்லி தொகுதியை இழக்கப் போகிறாா் என்று பா்வேஷ் வா்மா கூறியுள்ளாா். அதைக் கேட்டு எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. அவரை சில நாள்கள் கனவில் வாழ விடுங்கள்.
அரசு ஊழியா்களுக்கான வீட்டுவசதித் திட்டம் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு நிலம் வழங்கினால் தில்லி அரசு வீடுகளைக் கட்டித் தரும் என உறுதியளிக்கிறேன். இந்தத் திட்டத்தை துப்புரவுத் தொழிலாளா்களைப் பயனாளிகளாகக் கொண்டு தொடங்கலாம். பின்னா், மற்ற அரசு ஊழியா்களுக்கு எளிதான விதிமுறைகளில் வீடுகளை வழங்க முடியும் என்றாா் கேஜரிவால்.