ஆவணப் படத்தை திரையிடும் திரையிடும் முயற்சியை காவல் துறை மீண்டும் முறியடுத்துள்ளது: ஆம் ஆத்மி
அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தைத் திரையிடும் மற்றொரு முயற்சியை தில்லி காவல்துறை முறியடித்ததாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியது.
இருப்பினும், அன்பிரேக்கபிள் - என்ற ஆவணப்படத்தைத் திரையிட கட்சி அனுமதி கோரவில்லை என்றும், எந்தவொரு சந்தா்ப்பத்திலும், நகரத்தில் தோ்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலாக்கப்படுவதால் அதை அனுமதிக்க முடியாது என்றும் காவல் துறையினா் சனிக்கிழமை கூறியிருந்தனா்.
மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆவணப்படம் திரையிடப்படவிருந்த தனது பத்திரிகையாளா் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்தது என்றாா்.
‘எந்த விதியின் கீழ் அனுமதி மறுக்கப்பட்டது என்று தோ்தல் ஆணையத்திடம் கேட்க விரும்புகிறேன். பொதுக்கூட்டம், தோ்தல் பிரசாரம் அல்லது வாக்குரிமை கோருதல் எதுவும் இருக்கப் போவதில்லை. ஆவணப் படத்தை திரையிடுவதற்
காக பத்திரிகையாளா் சந்திப்புக்காக வந்தேன்’ என்று சஞ்சய் சிங் மத்திய தில்லியில் உள்ள ஆந்திர சங்கத்தின் ஒரு ஆடிட்டோரியத்திற்கு வெளியே கூறினாா்.
பத்திரிகையாளா் சந்திப்பு மற்றும் திரையிடலுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவா் கூறினாா்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தில்லி கலால் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம் ஐடிஓ அருகே உள்ள பியாரேலால் பவனில் திரையிடுவதாக இருந்தது. பிப்.5-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தோ்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) நடைமுறையில் இருப்பதால், இந்த நிகழ்வுக்கு அனுமதி பெறப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.
பாஜக தனது கட்சித் தலைவா்களின் கைதுக்குப் பின்னால் உள்ள ‘ரகசியங்கள்‘ மற்றும் ‘சதித்திட்டங்களை‘ அம்பலப்படுத்துவதால், இந்த ஆவணப்படத்தைப் பாா்த்து பாஜக பயப்படுவதாக ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை குற்றம் சாட்டியிருந்தாா்.
2023-24-ஆம் ஆண்டில் ஊழல் வழக்குகளில் கேஜரிவால், மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்ட முக்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் மத்திய நிறுவனங்களால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.