அண்ணனுக்கு திருமணம்; தம்பிக்கு இறுதிச்சடங்கு- ஒரேநாளில் திருமண மகிழ்ச்சி துக்கமாக மாறிய சோகம்
விருதுநகர் மாவட்டத்தில், அண்ணனுக்குத் திருமணம் நடைபெற்று முடிந்த சில நிமிடங்களிலேயே, மணமகனின் தம்பி இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்ததால், திருமண மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "திருச்சுழி அருகே ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் வடிவேல் முருகன் (வயது 25). குடிப்பழக்கம் கொண்ட வடிவேல் முருகன், அடிக்கடி காணாமல்போய் வீடு திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆலடிப்பட்டி சி.எஸ்.ஐ.,சர்ச் ஊரணிக்கு வடிவேல் முருகன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. வடிவேல் முருகன் மாயமானதை வழக்கமான நிகழ்வாகக் கருத்தில் எடுத்து வீட்டில் உள்ள உறவினர்களும் அவரைத் தேடும் பணியில் ஈடுபடவில்லை. இந்நிலையில் வடிவேல் முருகனின் அண்ணனான, நாகேந்திரன்(27) என்பவருக்கு ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால், வீட்டில் உள்ளவர்கள் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளனர். தொடர்ந்து திட்டமிட்டபடி நாகேந்திரனுக்குத் திருச்சுழி பூமிநாதர் கோயிலில் வைத்து நேற்று திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில், மீன்பிடிக்கசென்று காணாமல் போன வடிவேல் முருகன் ஊருணியில் இறந்து மிதப்பதாகக் குடும்பத்தாருக்குத் தகவல் கிடைத்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அங்கு சென்று பார்த்தபோது வடிவேல் முருகன் நீரில் மூழ்கி இறந்ததில் உடல் உப்பிய நிலையில் பிணமாகக் கண்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து தகவல் திருச்சுழி போலீஸூக்கும், தீயணைப்பு மீட்பு படைக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர், உருணியில் இறந்தநிலையில் வடிவேல் முருகனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து அவரின் உடல், உடற்கூராய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர். ஒரே நாளில் ஆலடிப்பட்டி கிராமத்தில் அண்ணனுக்கு திருமண வைபோக நிகழ்ச்சியும், தம்பிக்கு துக்க நிகழ்ச்சியும் நடந்தது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.