மகாராஷ்டிரா: 10,12-ம் வகுப்பு மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் சாதிப்பெயர் - சர்ச்சையானதால் புது முடிவு
மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 12வது வகுப்பு மற்றும் அதனை தொடர்ந்து 10வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வுக்காக இப்போதே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் சாதிப்பெயரும் இடம் பெற்று இருக்கிறது. இதற்கு முன்பு இது போன்று மாணவர்களின் சாதிப்பெயர் இடம் பெற்றது கிடையாது. முதல் முறையாக இம்முறை ஹால் டிக்கெட்டில் சாதிப்பெயர் இடம் பெற்று இருந்தது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் மத்தியில் சாதி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்திருப்பதாக கல்வி ஆர்வலர்களும், பெற்றோரும் குற்றம் சாட்டினர். அரசின் இம்முடிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து இம்முடிவை அரசு திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. இது குறித்து மாநில அரசு தேர்வாணையத்தின் தலைவர் சரத் கோஷாவி வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் சாதியை குறிப்பிட்டு போடவில்லை.
அவர்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்களின் வசதிக்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள குறிப்பேடுகளில் மாணவர்களின் பெயர், சாதி, பெற்றோர் பெயர் தவறாக பதிவாகி இருப்பதாக மாணவர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இது எதிர்காலத்தில் மாணவர்களின் எதிர்கால கல்விக்கு இடையூராக இருக்கிறது. எனவே ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் சாதிப்பெயரை குறிப்பிடுவதன் மூலம் அதில் தவறு இருந்தால் அதனை மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்து சரி செய்து கொள்ள முடியும்.
அதோடு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் இது எளிதாக இருக்கும். பள்ளி ஆவணங்களில் சாதி தொடர்பான விபரங்கள் சரியாக இருந்தால் கல்வி உதவித்தொகை பெறுவது எளிதாக இருக்கும்'' என்றார். பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் வந்ததால் அரசு ஹால் டிக்கெட்டில் சாதிப்பெயரை குறிப்பிடும் திட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. மாணவர்கள் புதிய ஹால் டிக்கெட்டை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாநில அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.