`நானே மாப்பிள்ளை; நானே புரோகிதர்...' - தன் திருமணத்தில் தானே திருமணச் சடங்குகள் செய்த இளைஞர்!
உத்தரப்பிரதேச மாநிலம், சஹராம்பூர் அருகில் உள்ள ராம்பூர் மணிகரன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் விவேக் குமார். இவருக்கு ஹரித்வாரில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமகன் ராம்பூரில் இருந்து ஹரித்வாருக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவர் மணமேடையில் வந்து அமர்ந்ததும், புரோகிதர்கள் மந்திரங்கள் சொல்ல தயாரானார்கள். உடனே விவேக் குமார் எனது திருமணத்திற்கு நானே மந்திரங்கள் மற்றும் சடங்குகள் செய்வேன் என்று தெரிவித்தார். இதனை கேட்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் திருமண சடங்குகள் செய்ய வந்திருந்த புரோகிதர்கள் சடங்குகளை செய்யட்டும் என்று சொன்னார்கள். ஆனால் அதனை விவேக் குமார் கேட்கவில்லை. எனது திருமணத்திற்கு நான் தான் சடங்குகளை செய்வேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார்.
தான் ஏற்கனவே வேத மந்திரங்கள் கற்று இருப்பதாகவும் தன்னால் சடங்குகளை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அவரே திருமண சடங்குகள் செய்ய ஆரம்பித்தார். திருமண சடங்குகள் செய்து கொண்டே மணமகனுக்கான வேலையையும் செய்ய ஆரம்பித்தார். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் திறம்பட செய்து மணமகளின் கழுத்தில் தாலியையும் கட்டி முடித்தார். அவர் மணமேடையில் மணமகனாக அமர்ந்து கொண்டு புரோகிதர் செய்யவேண்டிய மந்திரங்களை ஓதும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது.
பி.பார்ம் முடித்துள்ள விவேக் குமார் ஆர்ய சமாஜத்தில் வேதங்களை கற்று தேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். ``12வது வகுப்பு முடித்த பிறகு வேதங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம், நாம் நவீனவற்றை ஏற்றுக்கொள்ளும்போது, நமது கலாசாரத்தை மறந்துவிடக் கூடாது என்பதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார். இதற்கு முன்பு விவேக் பல திருமணங்களையும் நடத்தி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.