Padma Awards: 'அஜித் குமாருக்குப் பத்மபூஷண்; அஷ்வினுக்குப் பத்மஸ்ரீ' - கௌரவித்த மத்திய அரசு
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்துக்கும் கிரிக்கெட்டர் அஷ்வினுக்கும் பத்ம விருதுகளை அறிவித்து கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.
பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட்டர் அஷ்வினுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 700+ விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அஷ்வின் சமீபத்தில்தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
அவரின் சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. மதுரையைச் சேர்ந்த பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த தவில் வித்வான் கலைஞன் தட்சணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், நடிகர் அஜித்துக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதுமிருந்து மொத்தம் 19 பேருக்குப் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் அஜித்தும் ஒருவர். நடிகை சோபனா சந்திரசேகர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி போன்றோருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் தொடர்ந்து நடித்து வருவதால் அவரின் கலைப்பணியைப் பாராட்டி அவருக்கு இந்த விருதை அறிவித்து கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...