ஜம்மு-காஷ்மீா்: குடியரசு தின நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்புடன் கொண்டாட்டம்
ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்ற குடியரசு தின நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பலத்த பாதுகாப்புடன் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி, ஜம்முவில் எம்.ஏ.மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதான நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தேசியக் கொடி ஏற்றினாா். முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமை விருந்தினராக பங்கேற்றாா்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு சனிக்கிழமை இரவு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, எம்.ஏ.மைதானம் முழுவதும் காவல் துறை அதிகாரிகள் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினா். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மின்னஞ்சலை அனுப்பிய நபரை கைது செய்ய சிறப்புப் படை அமைக்கப்பட்டது.
காஷ்மீரில்...: காஷ்மீா் பகுதியில் பலத்த பாதுகாப்புடன் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்ச்சிக்கு துணை முதல்வா் சுரீந்தா் குமாா் செளதரி தலைமை தாங்கினாா். இந்நிகழ்ச்சியில் சுமாா் 20 ஆயிரம் போ் கலந்துகொண்டனா். இதேபோல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காஷ்மீரில் வழக்கமாக குடியரசு தின கொண்டாட்டத்தின்போது கைப்பேசி இணைய சேவைகள் முடக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு இணைய சேவை முடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.