`குடிகார கணவர்களால், தினந்தினம் சித்ரவதை; எனவேதான்...!' - ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொண்ட தோழிகள்
உத்தரப்பிரதேசத்தில் மது போதையால் இரண்டு ஆண்கள் தங்களது மனைவியை இழந்துள்ளனர். ஆண்களால் பாதிக்கப்பட்ட இரு பெண்களும் தங்களுக்குள் திருமணமும் செய்து கொண்டனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரை சேர்ந்தவர் கவிதா. இவரது தோழி குஞ்ஜா. இவர்கள் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி தோழிகளாக இருந்து வருகின்றனர். இருவரது கணவர்களுமே குடிகாரர்கள்தான். அவர்கள் தினமும் குடித்துவிட்டு வந்து தங்களது மனைவியை அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். கணவர்களின் சித்ரவதை மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து கவிதா தனது தோழியுடன் பகிர்ந்து கொண்டார்.
இதே போன்று குஞ்ஜாவும் தனது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார். அவர்கள் அடிக்கடி இது போன்று கஷ்டங்களை பகிர்ந்து கொண்டபோது, நாம் ஏன் இது போன்ற குடிகார கணவர்களுடன் வாழவேண்டும் என்று இருவரும் விவாதிக்க ஆரம்பித்தனர். கணவரை பிரிந்தால் என்ன செய்வது என்பது குறித்தும் விவாதித்தனர். இதில் இருவரும் கணவர்களை பிரிந்து சென்று ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். உடனே அவர்கள் காரியத்தில் இறங்கினர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள தியோரியா நகரில் இருக்கும் சோட்டா காசி எனப்படும் சிவன் கோயிலில் ஒருவரை ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதில் குஞ்ஜா மணமகனாக மாறி கவிதாவிற்கு நெற்றியில் குங்குமம் வைத்து மாலை மாற்றி தனது மனைவியாக்கிக் கொண்டார்.
இது குறித்து குஞ்ஜா கூறுகையில், "எங்களது குடிகார கணவர்களால் நாங்கள் சொல்ல முடியாத சித்ரவதையை அனுபவித்துவிட்டோம். எனவேதான் அன்பு மற்றும் அமைதிக்காக புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டோம். கோரக்பூரில் தம்பதியாக வாழ முடிவு செய்திருக்கிறோம். இப்போது எங்களுக்கு வீடு இல்லை. வாடகைக்கு வீடு எடுத்து வாழப்போகிறோம்'' என்று தெரிவித்தார். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த கோயில் பூஜாரி உமா சங்கர் இது குறித்து கூறுகையில், "இரு பெண்களும் வந்தனர். அவர்களே மாலை வாங்கி வந்து திருமண சடங்குகள் செய்து திருமணம் செய்து கொண்டனர்" என்றார். இரு பெண்களின் முடிவால் இரண்டு ஆண்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.