13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்
Vijay: `நான் ஆணையிட்டால்...' - விஜய் படங்களும் எம்.ஜி.ஆர் ரெபரன்ஸ்களும் ஒரு பார்வை
விஜய் சாட்டையை சுழற்ற 'ஜனநாயகன்' என்ற தலைப்போடு நான் ஆணையிட்டால் என்கிற வரிகளையும் சேர்த்து படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அரசியல்வாதி அவதாரம் எடுத்த பிறகு விஜய் கமிட் ஆகி வெளியாகவிருக்கும், அவர் சொன்னபடி அவரின் கடைசிப் படம் என்பதால் 'ஜனநாயகன்' மீது எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கிறது.
எம்.ஜி.ஆர் ரெபரன்ஸோடு அரசியல் சாட்டையை விஜய் சுழற்றவிருக்கிறார் என்பதை போஸ்டர் மூலமே கடத்திவிட்டார்கள். ஆனால், விஜய் அரசியல் நெடி வீசும் படங்களில் நடிப்பதோ எம்.ஜி.ஆரோடு தன்னை இணைத்துப் பேச வைப்பதோ இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பல முறை இப்படி நடந்திருக்கிறது. விஜய் எம்.ஜி.ஆரை கையிலெடுப்பதன் பின்னணி என்ன?
நாளைய தீர்ப்பு:
அரசியலுக்கு வந்துவிட்டதால் கடைசிப்படமாக இந்தப் படத்தில்தான் நடிக்கிறேன் என விஜய் அறிவித்துவிட்டதால், இந்தப் படம் கட்டாயம் ஏதோ அரசியல் சம்பந்தமான அம்சங்களை உள்ளடக்கிய படமாகத்தான் இருக்குமென கணிக்கப்பட்டது. அதன்படி, படத்திற்கு 'நாளைய தீர்ப்பு' எனப் பெயர் வைக்க பரிசீலித்து வருகிறார்கள் என்றும் பேசப்பட்டது. நாளைய தீர்ப்பு விஜய்யின் முதல் படம். அது அவரின் தந்தை எஸ்.ஏ.சியே இயக்கியிருந்த படம். அதிலேயே நிறைய அரசியல் குறியீடுகளை எஸ்.ஏ.சி வைத்திருப்பார். படத்தில் விஜய்யின் வீட்டு வாசல் சுவற்றில் ஒரு பக்கம் இரட்டை இலையும் ஒரு பக்கம் உதயசூரியனும் வரையப்பட்டிருக்கும். விஜய்யின் ஓப்பனிங் பாடலிலும் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என எல்லா கட்சிகளின் ஆளுமைகளையும் கலந்துகட்டி புகழும் வகையில் இடம்பெற்றிருக்கும். திமுக அனுதாபி எனச் சொல்லப்பட்ட எஸ்.ஏ.சி தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும்போது அவரை பொதுவானவராக காட்டிக்கொள்ள செய்த வேலையாக அது பார்க்கப்பட்டது.
மாஸ் ஹீரோ:
குறிப்பிடும் வகையில் படங்கள் நடித்து வியாபரமுள்ள ஹீரோ எனும் அந்தஸ்தை எட்டிய பிறகு விஜய் கையிலெடுத்தது ரஜினியின் ஸ்டைல். ரஜினி மாதிரியே மாஸ் மசாலா சென்டிமென்ட் பாணி படங்களை தேர்வு செய்து நடித்தார். 'அண்ணாமலை தம்பி இங்க ஆட வந்தேன் டா..' என தன்னை ஒரு ரஜினி ரசிகராகவும் வெளிக்காட்டிக் கொண்டார். `இவன் பார்த்தா சின்ன ரஜினிதான்' எனப் பாடல் வரியும் விஜய் படத்தில் இடம்பெற்றது. ரஜினியின் பட விழாக்களில் கலந்துகொண்டு நிஜ வாழ்விலும் தீவிரமான ரஜினி ரசிகன்தான் என்பதை போல தனது பேச்சுகளை அமைத்துக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் ரஜினியைக் கடந்து எம்.ஜி.ஆர் ரெபரன்ஸ்கள் பலவற்றை படத்தில் வைக்க ஆரம்பித்தார். 'வசீகரா' படத்தில் எம்.ஜி.ஆர் திரையில் தோன்றி விஜய்க்கு வாழ்த்து சொல்வதை போலக் காட்சி இருக்கும். அதேமாதிரி, பல படங்களில் எம்.ஜி.ஆரின் மேனரிசங்களையும் செய்திருப்பார். ரசிகர் மன்றமாக இருந்து மக்கள் இயக்கமாக தன்னுடைய ரசிகர் கூட்டத்தை மாற்றிய பிறகு அவரின் இந்த வேகம் இன்னும் அதிகரித்தது. இன்னும் பல படங்களில் தீவிரமாக எம்.ஜி.ஆர் ரெபரன்ஸ்களை வைக்க ஆரம்பித்தார்.
MGR - ஸ்டைல்:
இசை வெளியீட்டு விழா மேடைகளில் மேடையில் எம்.ஜி.ஆர் பற்றி குட்டிக்கதையெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் 'நம் நாடு' படத்தின் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு தேச ஒற்றுமை பற்றி பேசியிருப்பார். 'லியோ' வெற்றி விழாவில் ஏழைகளுக்கு யார் உதவினாலும் அது எம்.ஜி.ஆர் என்றுதான் நினைப்பார்கள் எனக் கூறி அங்கேயும் எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு கதை சொல்லியிருப்பார்.
`மெர்சல்' படத்தின் அறிமுகக் காட்சியிலேயே விஜய்யின் அறை முழுக்க எம்.ஜி.ஆர் படமாக மாட்டப்பட்டிருக்கும். ப்ளாஷ்பேக்கில் மதுரையில் ஊர் தலைவராக காட்டப்படும் விஜய்யும் எம்.ஜி.ஆரும் ஒரே ப்ரேமில் நடந்து வருவது போல ஷாட் வைக்கப்பட்டிருக்கும். பிகிலில் ராயப்பன் கேரக்டர் 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...' என எம்.ஜி.ஆர் பாடலை பாடிக்கொண்டே அறிமுகமாவார். இப்படி பல இடங்களில் விஜய், எம்.ஜி.ஆர் ரெபரன்ஸ் எடுத்திருக்கிறார்.
ஆனால், இந்த முறை 'நான் ஆணையிட்டால்..' என விஜய் எடுத்திருக்கும் எம்.ஜி.ஆர் ரெபரன்ஸ் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாதது. ஏனெனில், கட்சி தொடங்கிய பிறகு விஜய் எந்த இடத்திலுமே அதிமுக பற்றிய விமர்சனத்தை முன்வைக்கவே இல்லை. அதிமுக தரப்பிலும் விஜய்யைப் பற்றி மௌனமாகவே இருக்கிறார்கள். சில இடங்களில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதுசம்பந்தமாகப் பேசுகையில் இரண்டு விதமான கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் முன் வைக்கின்றனர்.
விஜய் அதிமுகவோடு கூட்டணி செல்லும் எண்ணத்தில் இருக்கலாம் அல்லது அதிமுகவின் எம்.ஜி.ஆர் அபிமான ஓட்டுகளை குறிவைத்து இப்படி செய்யலாம் என்கின்றனர். அதனால்தான் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் அன்றும் விஜய்யின் மீதான கூத்தாடி என்கிற விமர்சனத்துக்கு பதில் சொல்லும் வகையில் எம்.ஜி.ஆரின் நினைவுகளை பகிர்ந்திருந்தார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
விஜய் - ஜனநாயகன் - நான் ஆணையிட்டால், இதைப்பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.