Siragadikka aasai : ரோகிணியைப் பற்றிய உண்மை; வித்யா என்ன செய்வார்? - இந்த வாரம் என்ன நடக்கும்?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து vs ரோகிணி எனக் கதைகளம் நகர்கிறது. இடையிடையே மனோஜின் காமெடி, விஜயாவின் ரகளை, வித்யா-முருகன் காதல், மீனாவின் தொழில் பிரச்னை என ஸ்வாரஸ்யம் கூடுகிறது.
சமீபத்திய எபிசோடுகளில் முத்துவின் கைகளுக்குத் தொலைந்துபோன மொபைல் போன் கிடைக்கிறது. இந்த போன் மூலமாக தான் சத்யாவின் வீடியோ வெளியாகி பிரச்னைகளை ஏற்படுத்தியது.
அதன்பிறகு தான் சத்யா திருந்தி சிட்டியிடம் இருந்து விலகினார். சிட்டி தற்போது ரோகிணியுடன் கூட்டணி வைத்து முத்துவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்.
கடந்த சனிக்கிழமை எபிசோடில் ரோகிணிக்கும் வித்யாவிற்கும் பெரிய வாக்குவாதம் ஏற்படுகிறது. வித்யா முத்துவின் மொபைல் போனை கடலில் வீசவில்லை என்பது தெரிந்து ரோகிணி வித்யாவை கடுமையாக திட்டுகிறார். இத்தனை நாள் ரோகிணியின் திட்டுகளை வாங்கி கொண்டு அமைதியாக இருந்த வித்யா இம்முறை எதிர்த்துப் பேசுகிறார். நான் உனக்கு அடிமையில்ல என்று ரோகிணியை கடிந்து கொள்கிறார். ஆரம்பத்தில் இருந்தே ரோகிணியின் பொய்களுக்கு வித்யா ஆதரவாக இருந்தாலும், வித்யாவுக்கு இதில் விருப்பமில்லை. நட்புக்காக இத்தனையும் அவர் செய்து வந்தார்.
முத்து தன் பழைய மொபைல் போன் கிடைத்த விஷயத்தை அண்ணாமலையிடம் சொல்லி மகிழ்கிறார். அந்த மொபைல் போனை யார் திருடியது என்பது தெரிந்தால் வீடியோவை யார் வெளியிட்டார்கள் என்பது தெரிந்துவிடும் என அண்ணாமலை சொல்ல, முத்து அதைக் கண்டுப்பிடிக்க களமிறங்குகிறார். அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ரோகிணி மீது தான் சந்தேகம்.
நேற்று வெளியான புரோமோவில், செருப்புத் தைக்கும் தாத்தாக் கடையில் மொபைலை தவறவிட்டுப் போனது யார் என்பதைக் கண்டுபிடிக்க வித்யாவின் புகைபடத்தை தாத்தாவின் உறவினர் மொபைலுக்கு அனுப்பி தாத்தாவிடம் காட்ட சொல்கிறார். முத்து எதிர்பார்த்தது போல் அந்த மொபைலைத் தவறவிட்டது வித்யா தான். முத்து நேராக வித்யா வீட்டிற்குச் சென்று என் மொபைலை ஏன் திருடினாய் என்று கேட்க வித்யா திறுதிறுவென விழிக்கிறார். அவர் ரோகிணியைப் பற்றிய உண்மைகளை சொல்வாரா? அல்லது இந்த மொபைல் திருடச் சொன்ன விவகாரத்தை மட்டும் சொல்வாரா என்பது கேள்விக்குறி.
ஒரு வேளை வித்யா ரோகிணி தான் மொபைலைத் திருடினார் என்று முத்துவிடம் சொல்லிவிட்டால் முத்து வீட்டில் அனைவர் முன்னிலையிலும் வைத்து பஞ்சாயத்து செய்யக் கூடும். இல்லையெனில் வித்யா வழியில் கிடைத்த மொபைல் என சமாளிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.