ஆமை: தனிமை விரும்பிகள், மனிதனுக்கு மூத்தவை -ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
'வெறும் 3 அடி மனிதன் - உணவு பற்றாக்குறையா, மரபணு காரணமா?!' - ஆய்வு அவிழ்க்கும் முடிச்சுகள்!
உலகின் மிகச்சிறிய மனிதர்கள் குறித்தான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அதன்படி, இந்தோனேஷியாவில் உள்ள ஃப்ளோரஸ் தீவில் குள்ளமான மனித இனம் இருந்ததற்கான சான்றாக புதைபடிவ எலும்புத் துண்டுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 'அது 3 அடி உயரம் கொண்ட ஒரு மனிதனின் எலும்புத் துண்டுகள்' என்பதனை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்த எலும்புத் துண்டுகள் 'ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ்' இனத்தைச் சேர்ந்தவர்களுடையது எனவும், இந்த புதைபடிவ எச்சங்கள் சுமார் 7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் படிவியல் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த இனக்குழுவினர் ‘ஹாபிட்’ எனவும் அழைக்கப்படுகின்றனர்.
“குள்ள தீவுகள் குறித்தான ஆய்வுகள் மத்திய தரைக்கடல் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள மெகாபவுனா தீவுகளில் கிடைத்துள்ள புதைபடிவ சான்றுகளை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டு உள்ளது. இந்தக் குள்ளத்தன்மை அவருடைய மூதாதையர்களிடம் இருந்து தோன்றியிருக்கலாம். விலங்கினங்களில் ஒரு குறிப்பிட்ட தீவில் குள்ளத்தன்மை உள்ள விலங்குகள் இருப்பது பிரச்னை இல்லை. ஆனால் முதன்முதலில் ஹோமினின் இனத்தில் இப்படி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள கடினமாக உள்ளது” என்று பழங்காலவியல் நிபுணர் டாக்டர் கெர்ட் வான் தெரிவித்து உள்ளார்.
20 வருடங்களுக்கு முன்னர், முதன் முதலில் ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து உயிரினங்களின் தோற்றம் குறித்து அறிவியல் உலகில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்த குறைந்த உயரமுள்ள குள்ளமனிதர்கள் உண்மையிலேயே ஒரு தனித்துவமான இனமா அல்லது வளர்ச்சிக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள மனித இனமா என்று சில நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றவர்கள் இந்தக் குள்ள மனித இனம் மிகவும் பழமையான, சிறிய குரங்கு போன்ற இனங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுகின்றனர்.
குள்ளர்கள் தீவு இருப்பதை ஒரு சில திரைப்படத்திலும், கற்பனை கதைகளிலும் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் குள்ளர்கள் இருந்த தீவு குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட தீவில் வளங்கள் பற்றாக்குறையினாலும், வேட்டையாடப்படுதல் குறைவதனாலும் அந்தத் தீவில் வாழும் உயிரினங்களின் பரிணாமத்தில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றத்தின்படி உடல் அளவுகள் குறைந்து உயரமும் குறையும் என்று அறிவியல் பூர்வமாக கூறுகின்றனர். இதனை ஆங்கிலத்தில் 'Dwarf Island' என்றும் கூறுவர். இந்தப் பரிணாம வளர்ச்சி விலங்குகளில் பொதுவானதாக இருந்தாலும், மனித பரிணாமத்தில் இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.