Clownfish: 'பெண்ணாக மாறும் ஆண் மீன்' - நீமூவின் வாழ்க்கையும், டிஸ்னி மறைத்த உண்மையும்!
தி ஃபைண்டிங் நீமூ என்ற உலக புகழ்பெற்ற திரைப்படத்தை நாம் அனைவருமே பார்த்து ரசித்திருப்போம். அனிமேஷன் படங்களின் வரலாற்றில் அதொரு மைல்கல்.
பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் பவளப்பாறைகள் நிறைந்த பகுதிகளிலும், மணல்திட்டுகளிலும் வசிக்கும் கவர்ச்சியான க்ளோன் ஃபிஷ்களை பார்ரவுடன் தெரிந்துகொள்ளும் அளவு நமக்கு பரிச்சயமாக்கியது அந்த திரைப்படம்தான்.
உண்மையான க்ளோன் ஃபிஷ்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையும், நீமூ திரைப்படத்தின் விசித்திரமான பக்கத்தையும் பார்க்கலாம்.
க்ளோன் ஃபிஷ்ஷில் மொத்தம் 30 இனங்கள் உள்ளன. வெப்ப மண்டல கடல்களில் நிறைந்திருக்கும் இவற்றில் 13 இனங்களை இந்தோனேசியாவில் காணலாம். முக்கியமாக பாலியில் உள்ள நுசா என்னுமிடத்தில்.
க்ளோன் ஃபிஷ்கள் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் வாழ்க்கை மாற்றங்கள் நிறைந்தது, அவற்றின் குடும்ப அமைப்புகள் சிக்கலானவை.
பெண்ணாக மாறும் Clownfish
க்ளோன் ஃபிஷ்கள் தொடர்ச்சியாக மாற்றம் கொள்ளும் ஆண்-பெண் என இரண்டு பாலுறுப்புகளையும் கொண்டுள்ளன. protandrous sequential hermaphroditism என அழைக்கப்படும் உயிரியல் நிகழ்வுக்கு ஆட்படுகின்றன.
எல்லா க்ளோன் ஃபிஷ்களும் பிறக்கும்போது ஆண்களாகவே பிறக்கின்றன. பின்னர் பாலினத்தை மேம்படுத்தும் சூழல் அமையும் மீன்கள் பெண்ணாக மாறிவிடுகின்றன. மனிதர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது பால் புதுமையினராகவோ இருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் அப்படியே இருப்பதனால் அவர்களுக்கு மற்ற பாலினத்தவர்களை புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கும். ஆனால் பெண் க்ளோன் ஃபிஷ்களுக்கு அப்படி இருக்காது என நம்பலாம்!
ஆண் மீன்களின் சோக வாழ்க்கை
க்ளோன் ஃபிஷ்கள் anemone (அனிமோன்) எனப்படும் கடல்வாழ் தாவரத்தில் குடும்பமாக வாழும். ஒரு குடும்பத்தில் ஒரு இனப்பெருக்கம் செய்யும் ஆணும், 4 துணை ஆண்களும் இருக்கும். இவை அங்கு ஆதிக்கம் செலுத்தும் பெண்ணால் கட்டுபடுத்தப்படும்.
பெண்கள் எங்கிருந்து வந்தன எனக் கேள்வி எழலாம்... கூட்டத்தில் உடல் வலிமையுடன் இருக்கும் ஆண்கள் ஆதிக்கம் செய்யும் நிலைக்கு வரும்போது hermaphroditism நடந்து பெண்ணாக மாறிவிடும்.
ஆண் க்ளோன் ஃபிஷ்களின் வாழ்க்கை மிகவும் சோகமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அவை அளவில் பெரியதாக வளர்ந்து பெண்ணை ஆதிக்கம் செய்யும் நிலையில் இருந்தால் அனிமோனிலிருந்து வெளியேற்றப்படும்.
இதேபோல துணை ஆண்களுக்குள்ளும் (வேலைக்கார ஆண்கள்) ஆதிக்க படிநிலைகள் இருக்கும். மற்ற மீன்கள் மீது ஆதிக்கம் செலுத்த அதிகப்படியாக வளரும் ஆண், இனப்பெருக்க ஆணின் இடத்தைப் பிடிக்கும் அச்சுறுத்தல் இருந்தால் அதுவும் அனிமோனிலிருந்து வெளியேற்றப்படும்.
அனிமோனிலிருந்து வெளியேறுவது க்ளோன் ஃபிஷ்களுக்கு பல ஆபத்துகளை விளைவிக்கக் கூடும்.
அனிமோனுடன் கூட்டு வாழ்வு
அனிமோன் என்ற தாவரமும் க்ளோன் ஃபிஷ்ஷும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. இப்படி இரண்டு வெவ்வேறு இனங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தால் அதற்கு symbiosis என்று பெயர்.
அனிமோன் க்ளொன் ஃபிஷ்ஷுக்கு இருப்பிடமாக இருக்கிறது. அவற்றின் விழுதுகளில் (tentacles) உள்ள நச்சு பிற வேட்டையாடிகளிடமிருந்து க்ளோன் ஃபிஷ்ஷைப் பாதுகாக்கிறது.
அந்த நச்சு பாதிக்காத வண்ணம் க்ளோன் ஃபிஷ் நோய் எதிர்ப்பைப் பெற்றுள்ளன.
இந்த பாதுகாப்புக்கு கைமாற்றாக க்ளோன் ஃபிஷ்கள், அத்தனை பெருங்கடலில் வேறெங்கும் இல்லாமல் அனிமோன் உள்ளே மலம் கழிக்கின்றன. சமீபத்திய ஆய்வுகள் க்ளோன் ஃபிஷ்ஷின் மலம் அனிமோனுக்கு ஊட்டச்சத்து அளிப்பதைக் கண்டறிந்துள்ளன.
மேலும் ஒட்டுண்ணிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. க்ளோன் ஃபிஷ்கள் நீமூ படத்தில் காட்டப்படுவதுபோல உங்களுக்காக ஜோக்குகளைக் கொடுக்கலாம், ஆனால் என்ன விலை கொடுத்தாலும் அவற்றின் வீடான அனிமோனைக் கொடுக்காது.
டிஸ்னி மறைத்த உண்மை
க்ளோன் ஃபிஷ்கள் அவற்றின் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதில் கறாராக இருக்கும். ஒருவேளை இனப்பெருக்கம் செய்யும் ஆணாக இருக்கும் மீன் இறந்துவிட்டால், வேலைக்கார ஆணாக இருக்கும் மீன் வளர்ச்சியடைந்து அந்த இடத்தை நிரப்பும்.
இதேப்போல பெண் இறந்துவிட்டாலும் இனப்பெருக்க ஆணோ அல்லது மற்றொரு ஆணோ வளர்ச்சியடைந்து hermaphroditism நிகழ்வுக்கு உட்பட்டு பெண்ணாக மாறி அந்த இடத்தை நிரப்பும்.
'குடும்பம்ன்னா குறை இருக்கத்தான் செய்யும், ஆனா நமக்கு இருக்கிறது ஒரே ஒரு குடும்பம்தான்' என செண்டிமென்ட்டலாக பேசும் வாரிசு படம்போல, தங்களது குடும்பம் எவ்வளவு டாக்ஸிக்காக இருந்தாலும் அந்த அமைப்பிலிருந்து வெளியேறி வாழத்தெரியாத மீன்கள் க்ளோன் ஃபிஷ்.
நீமூ படத்தில் வருவது போல ஒரு பாராகுடா மீன் முட்டைகளை அழித்து, பெண் மீனை கொன்றுவிட்டாலும் மற்ற மீன்கள் அதன் அனிமோனை விட்டு வெளியேறாது. மாறாக, பெரிய மீனாக வளர்ந்திருக்கும் மர்லின் அந்த அனிமோனின் பெண் மீனாகவும், நீமூ இனப்பெருக்க ஆணாகவும் வளர்ச்சியடையும். வேறொரு அனிமோனிலிருந்து வேலைக்கார ஆண்களை அழைத்துக்கொள்ளும்.
திரைப்படம் மனித உணர்வுகளுடன் ஒத்திசைய வேண்டுமென்பதால் டிஸ்னி இந்த அறிவியல் உண்மைகளை உங்களிடத்திலிருந்து மறைத்துவிட்டது!