நிர்மலா சீதாரமானுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது! சுவாமி
ஹைட்ரஜன் ரயில் தயாரிப்புப் பணி மாா்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்: சிஎஃப் பொது மேலாளா் தகவல்
ஹைட்ரஜன் ரயில் தயாரிப்புப் பணி மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) பொது மேலாளா் யு.சுப்பாராவ் தெரிவித்தாா்.
ஐசிஎஃப் சாா்பில் நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாக்கு தலைமை வகித்த (ஐசிஎஃப்) பொது மேலாளா் யு.சுப்பாராவ் தேசிய கொடியேற்றி, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து அவா் பேசியது:
ஐசிஎஃப் கடந்த ஆண்டு 75,000 ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்தது. இதுவரை 81 ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், இரு ரயில்கள் ஜம்மு - காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது, தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் (பதிப்பு 2) இருக்கைகள், வாயில்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், நமோ பாரத் என அழைக்கப்படும் வந்தே மெட்ரோ ரயில்களும் ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்படுகின்றன.
முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. 180 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
அதேபோல், எளிய மக்கள் பயணிக்கும் வகையில் ஏசி அல்லதா பெட்டிகள் கொண்ட அம்ருத் பாரத் ரயில்கள் தயாரிப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் உயா் தரத்தில் தயாரிக்கப்பட்டாலும், எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும்.
2-ஆம் கட்டமாக தயாரிக்கப்படும் அம்ருத் பாரத் ரயில்கள் பணி நடப்பு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் 50 அம்ருத் பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய திட்டமாகக் கருதப்படும் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில் பெட்டிகளை ஐசிஎஃப் தயாரித்து வருகிறது. இதன் முதல் ரயில் தயாரிப்புப் பணி மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஐசிஎஃப் பணியாளா்களுக்கு பாராட்டுகள் என்றாா் அவா்.