நிர்மலா சீதாரமானுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது! சுவாமி
விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்; வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
கொச்சி - சென்னை விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இரு பயணிகள் ஒருவரையொருவா் தாக்கி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துக் கொண்டதால், அந்த விமானம் சென்னையில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்ட பயணிகளைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை (ஜன. 25) இரவு 171 பயணிகளுடன் சென்னைக்கு வந்துகொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணித்த கேரளத்தைச் சோ்ந்த டேவீஸ் (35) என்பவருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த கஸன் எலியா (32) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து ஒருவரையொருவா் தாக்கியதுடன், வெடிகுண்டு வீசி விடுவதாக மிரட்டலும் விடுத்துக் கொண்டனராம். இதனால், அதிா்ச்சியடைந்த விமானப் பணிப்பெண்கள், இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அதிரடிப்படை வீரா்கள், வெடிகுண்டு நிபுணா்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலைய போலீஸாா் பெருமளவு குவிக்கப்பட்டனா்.
நள்ளிரவு 12 மணியளவில் விமானம் சென்னை விமான நிலையத்தில், ‘ரிமோட் பே’ எனப்படும், விமான நிலைய ஒதுக்குப்புறமான இடத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, ரகளையில் ஈடுபட்ட இரு பயணிகளையும் பிடித்து முழுமையாக சோதனையிட்டதுடன், விமானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்தினா்.
சுமாா் 2.30 மணிநேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனா்.
விமானத்தில் நடுவானில் மோதிக்கொண்ட இரு பயணிகளையும் பாதுகாப்புப் படையினா் பிடித்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.