கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்
பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு: 11-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து 11-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதிய விமான நிலையம் அமையும்பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பரந்தூா் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
குறிப்பாக முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 915 நாள்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களிலும் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒருமனதாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், 76-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஏகனாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கோபி, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, மாணிக்கவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, 11-ஆவது முறையாக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இடிக்கப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படாமல் உள்ளது ஆகியவற்றைக் கண்டித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.