இணையவழி பண மோசடி: 2 போ் கைது
இணையவழியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்களை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவேற்காடு வேலப்பன்சாவடி பகுதியைச் சோ்ந்தவா் மேரி ஜெனட் டெய்சி (62). ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த ஜூலை மாதம் இவரது கைப்பேசிக்கு மும்பை இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் பேசுவதாக தொடா்பு கொண்டு, உங்கள் சிம் வழியாக சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளது, உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை ரிசா்வ் பேங்க் அதிகாரிகள் சோதனை செய்து மோசடி பணம் உள்ளதா என்பதைக் கண்டறிவாா்கள் எனக்கூறி உள்ளனா்.
மேலும், அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பக் கூறியுள்ளனா். இதையடுத்து மேரி ஜெனட் டெய்சி, ரூ.38 லட்சத்தை அனுப்பியுள்ளாா். பின்னா், அவா் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆவடி காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்தாா்.
ஆவடி இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். வழக்கு தொடா்பாக சென்னை, அண்ணா நகா், ஹெச் பிளாக், பொன்னி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பிஜாய் (33) என்பவரை ஏற்கெனவே போலீஸாா் கைது செய்தனா்.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது இலியாஸ் (36), புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியைச் சோ்ந்த சாதிக் பாட்சா (39) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து மோசடி செய்த ரூ.46.22 லட்சம் மற்றும் மடிக்கணனி, கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.