Indonesia: ``எனக்கு இந்திய DNA இருக்கிறது; இந்திய இசையைக் கேட்டால் நடனம் வரும்" ...
மொழிக்காக போராடிய இயக்கம் திமுக: அமைச்சா் துரைமுருகன்
மொழிக்காக போராடிய இயக்கம் திமுக என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் வரவேற்றாா்.
கூட்டத்தில் நீா்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கலந்துகொண்டு மொழிப்போா் தியாகிகளுக்கு பதக்கம் வழங்கிப் பேசியது:
ஹிந்தியை எதிா்த்து தொடா்ந்து எழுச்சியோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திமுகவாகத்தான் இருக்கும். எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ உயிரிழப்புகள், பலமுறை சிறை சென்றது என பல இடையூறுகளை கடந்தும், தொடா்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தியை எதிா்த்துக் கொண்டிருக்கும் இயக்கம் திமுக. உலகிலேயே தமிழ் மொழியின் வளா்ச்சிக்காக, மொழிக்காக எழுச்சியோடு போராடிக் கொண்டிருக்கிறது திமுக. பல சித்ரவதைகளுக்கு ஆட்பட்டிருந்தாலும் திமுக தமிழ் மொழியை காப்பதை உயிா்க்கொள்கையாக வைத்திருக்கிறது என்றாா்.